சிறுகதை

பந்தி – ராஜா செல்லமுத்து

விழா முடிந்ததோ? இல்லையோ? தடபுடலாக பந்தி ஆரம்பம் ஆனது. அத்தனை ஆட்களும் வரிசையில் நின்று தங்களுக்குரிய தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.

விழாவை விட பந்தி வாசனையாக இருந்தது. பதார்த்தங்களின் வாசனை அந்த அரங்கத்தை மேலும் வாசனையாக்கியது.

எனக்கு போண்டா, எனக்கு சட்னி, எனக்கு உப்புமா என்று ஆளாளுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த உயர்தர உணவை எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் ? என்பதை அவர்கள் சாப்பிடும் தட்டை கணக்கு வைத்து பில் போடுவார்கள்.

ஒவ்வொரு தட்டும் உயர்ந்த விலையில் இருந்தது.சுவை அதிகமாக இருந்ததால் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் மக்கள் .

ஏய்… கமலேஷ் சீக்கிரம் வா என்று ரவி கூப்பிட கமலேஷும் அவரைச் சுற்றி இருந்த ஆட்களும் உடனே கிளம்பி சாப்பிட ஆரம்பித்தார்கள் .

எவ்வளவு சுவையா இருக்கு. அத விட்டுட்டு சும்மா உட்கார்ந்துட்டு இருக்க ? இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த இங்க சாப்பிடுறதுக்கு ஒன்னும் இருக்காது

என்று ரவி சொல்ல

ஆமா நீ சொல்றது சரி தான். எனக்கு ஒரு மாதிரியா இருந்தது; அதான் வரல . நீ கூப்பிட்ட உடனே வந்துட்டேன் என்று கமலேஷ் சொல்ல சுற்றி இருந்த ஆட்கள் எல்லாம் வாசனை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பரிமாறுபவர்களுக்கு கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது; ஏனென்றால் அவர்கள் எந்தப் பந்தியிலும் மக்கள் இவ்வளவு சாப்பிட்டது இல்லை.

சார் நீங்க என்ன கேட்டரிங் ? என்று ஒருவர் தின்று மென்று கொண்டிருக்கும் போதே பரிமாறுபவரின் முகவரியை வாங்கினார் .

என்ன ஆச்சு? என்று ஒருவர் பக்கத்தில் ஒருவர் கேட்டதற்கு

ரொம்ப சுவை அதிகமாக இருக்கு.. நம்ம வீட்டு விழாவுக்கும் கூப்பிடலாம்னு தான் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பரிமாறுபவர் கேட்டரிங் விசிட்டிங் கார்டை கேட்டவரின் பையில் திணித்தார்.

பிரமாதம்…. பிரமாதம்…. என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் சொல்ல மேலும் மேலும் கேட்டு வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார்கள் மக்கள்

ஒரு வழியாக அத்தனை பேரும் சாப்பிட்டு முடித்து விட்டார்கள்.

மூக்கில் தூக்கும் சுவை வாசனை உணவு சிறிது நேரத்திற்கெல்லாம் காலியானது.

பாஸ்கரன் பந்தி பரிமாறும் இடத்திற்கு வந்தார்:

ஐயா தட்டு குடுங்க

என்று கேட்க

இல்லைங்க எல்லாம் காலி ஆயிடுச்சு. அவ்வளவு பேரும் வழக்கத்தை விட அதிகமா சாப்பிட்டாங்க. நீங்க லேட்டா வந்துட்டீங்க இல்லஎன்று பரிமாறுபவன் சொன்னான்.

இல்லையா ? சரி என்று அந்த இடத்தை விட்டு நகர, அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் பரிமாறுபவரிடம் வந்து

இவர் யார் தெரியுமா ?

என்று கேட்டார்.

தெரியாது என்றான் உணவு பரிமாறுபவன்.

இவர் தான் இந்த விழா நாயகன். சாப்பிடுற எல்லாருக்கும் பணம் கொடுக்கிறது இவர்தான். அவருக்கு போய் இல்லைன்னு சொல்றிங்க என்று ஒருவர் சொல்ல

சார் மன்னிக்கணும். நீங்க கேட்டது 200 பேருக்கான டிபன். இதுவரைக்கும் 220 பேர் சாப்பிட்டு இருக்காங்க .இன்னும் வேணும்னா மறுபடியும் பில்லு கட்டணும் சரியா? என்றான்.

ஓகே இன்னும் ஒரு 20 பேருக்கு குடுங்க

என்று பாஸ்கரன் சொன்னதும் சிறிது நேரத்தில் அதே சுவை மிகுந்த உணவு மேஜைக்கு வந்தது .

ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மறுபடியும் வாங்கி சாப்பிட தனக்கான உணவை வாங்கிய பாஸ்கர் ஓரத்தில் போய் நின்று சாப்பிட ஆரம்பித்தார் .

20 பேருக்கான உணவு அரை மணி நேரத்தில் 40 பேரானது. இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பாஸ்கர்

இனியும் இங்க இருந்தோம்னா 500 டிபன் ஆயிடும் என்று அந்த இடத்தை விட்டு தட்டாேடு ஓடினார்.

––––––––––––––––––––––––––

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *