சிறுகதை

தமிழ்ப் பற்று – ராஜா செல்லமுத்து

சேகர் தமிழ்ப் பற்று மிக்கவன்.தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், கவிதைகள் என்று அத்தனையும் தேடிப் பிடித்து படிக்கும் பழக்கம் உள்ளவன்.

படித்து அறிவை வளர்த்த அளவுக்கு அவன் கைகளில் பணம் சேரவில்லை. அதைப் பற்றி அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அலுவல் நேரங்களைத தவிர மற்ற நேரங்களில் எல்லாம் தமிழ் மீது கண் வைத்திருப்பது தான் அவன் எண்ணமாக இருந்தது .

தமிழ் படித்தால் பணம் கிடைக்குமா? அதிலிருந்து வருமானம் வருமா? என்றெல்லாம் வியாபாரிகள் போல் அவன் கணக்குப் பார்ப்பதில்லை.

“அவளைப் படைத்து விட்டு குளத்தில் கை கழுவினான் பிரம்மன்….. குளமெல்லாம் தாமரைப் பூக்கள்”

என்ற கவிதையைப் படிக்கும் போது அவன் மனதுக்குள் ஏற்படும் மகிழ்வையும்

“உதிர்ந்த பூ மீண்டும் மரத்திற்குத் திரும்புகிறது ஓ பட்டாம்பூச்சி”

என்ற ஹைக்கூ கவிதையும் சிறுகதையும் படிப்பதன் மூலம் அவனுக்கு வருமானம் வரவில்லை என்றாலும் கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் வராத மகிழ்ச்சி நிம்மதி சேகரனுக்கு தமிழ் படிப்பதாலும் அறிவை வளர்ப்பதாலும் கிடைக்கிறது.

அதனால் தமிழ் மீது அவனுக்கு ஒரு பற்று இருந்தது.

ஒருமுறை அரிசி வாங்குவதற்காக கடைக்குச் சென்றான்.

விதவிதமான அரிசிகளை கொட்டி வைத்து அதன் விலையையும் அந்த அரிசியின் பெயரையும் எழுதி வைத்திருந்தார்கள்.

கடைக்காரரிடம் சென்றவன் தனக்கு தேவையான அரிசியை கேட்டான்:

இந்த பாருங்க உங்களுக்கு எது தேவையோ? அந்த அரிசியை தேர்ந்தெடுக்கலாம் என்றார்கள்.

மாதிரிகள் கொட்டி வைத்திருந்த அரிசியை நோட்டமிட்டான் சேகர்.

இதெல்லாம் யார் எழுதுனாங்க. தமிழ் கூட சரியா எழுத வரல.நல்லா எழுதினா தானே தமிழ் அழகா இருக்கும் .

அத 10 பேரு படிக்கிறவங்க பார்க்கிறவங்க எழுத்து அழகா இருந்தாத் தானே இவங்க மேல ஒரு மரியாதை வரும் என்று நினைத்துக் கொண்டே அரிசியின் மாதிரியைப் பார்த்துக் கொண்டே .

அப்படி பார்த்துக் கொண்டே சென்ற அவனுக்கு திடீரென்று கோபம் கொப்பளித்தது

என்ன சார் இது இவ்வளவு மோசமா இருக்கு என்றபோது

பதறியடித்த கடைக்காரன்

சார் என்ன சொல்றீங்க .என்ன ஆச்சு. அரிசில புழு எதுவும் கெடக்கா. வண்டு ஏதும் விழுந்திருக்கா என்று ஓடிவந்தான் கடைக்காரன்

அது கூட பரவாயில்லங்க தமிழ் இங்க மோசமா இருக்கு .இது என்ன அரிசி என்ற போது

மட்டை அரிசி என்றான் கடைக்காரன்.

சொல்றது நல்லாதான் சொல்றீங்க எழுதினது தப்பா இருக்கு என்றான் சேகர்

மட்டை அரிசிக்கு பதிலா மாட்டை அரிசின்னு எழுதி வச்சிருக்கீங்க. இது எவ்வளவு பெரிய தப்பு என்று கோபப்பட்ட சேகர் அங்கிருந்த பென்சிலை எடுத்து கரகர என்று அளித்தான்.

என்ன சார் இது தமிழ்நாட்டுல தமிழ தப்பா எழுதக்கூடாது என்று சொன்னபோது

அவன் அடுத்தடுத்த மாதிரியில் எழுதி வைக்கப்பட்டு இருந்ததை உற்று நோக்கினான்.

அத்தனையும் தவறாக இருந்தன. இந்தக் கடையில் அரிசி வாங்குவது பிழை என்று நினைத்து வெளியேறினான்.

சார் அரிசி வாங்கலையா ?என்று கடைக்காரன் கூப்பிட்டான்.

முதல்ல நல்ல தமிழ் படிச்சவங்கள கூப்பிட்டு அரிசி பேரெல்லாம் ஒழுங்கா தப்பில்லாம எழுதுங்க அப்புறமா நான் வந்து அரிசி வாங்குறேன் என்றான் சேகர்

சார் ஒன்ன திருத்திட்டீங்க. மிச்சத்தையும் நீங்களே திருத்துங்க என்றான் கடைக்காரன்.

அவன் சொல்வதும் சரிதான் என்று நினைத்த சேகர் மாதிரிகளின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்த அத்தனை அரிசியின் பெயரையும் அடித்து திருத்தி அதன் மறுபக்கத்தில் அழகாக எழுதி ஒட்ட வைத்தான்.

சார் நீங்க இவ்வளவு எழுதிட்டீங்க. நான் உங்களுக்கு அரிசி இலவசமாக தரேன் என்ற போது

எனக்கு இலவச வேண்டாம். தமிழ் எனக்கு சொல்லித் தந்ததே. யார் கிட்டயும் தலை குனிஞ்சு வாழக்கூடாது என்பதற்காகத் தான்

நீ தர்ற இலவசம் எனக்கு வேணாம்; நம் தமிழ் சரியாகி இருக்கிறது அப்படின்ற மகிழ்ச்சி எனக்கு போதும் .அஞ்சு கிலோ அரிசி குடுங்க என்றான் சேகர்

அரிசியை கொடுத்தான் வியாபாரி. அதை வாங்கிக் கொண்டு அதற்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு

அரிசியைச் சுமந்து கொண்டு வெளியே வந்த போது சேகர் மனத்திற்குள் ஒரு எண்ணம் ஓடியது.

தமிழை நாம் சரியாக படிக்கிறோம். ஆனால் நமக்கு அதிகமாக வருவாய் வந்து சேர மாட்டேங்குது.

அவன் தமிழ சரியாவே எழுதல.

தொழில சரியாச் செய்யிறான். வருவாய் பணம் வந்துகிட்டே இருக்கு

இப்படித்தான் நாட்டில நிறைய பேர் இருக்காங்க.

என்று நினைத்துக் கொண்டே நடந்தான் சேகர்

எது எப்படியோ அங்கிருந்த தமிழ நம்ம சரிப்படுத்திட்டோம் என்று வீதி வழியே நடந்து கொண்டிருந்த சேகருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது

திருப்பத்தில் அவன் நடந்து செல்லும் பாதையில் இட்லி, தோசை, பொங்கல் என்று எழுதி வைத்திருந்தார்கள்.

அதில் பொங்கல் க்கு “ள்” என்று “ல் ” என்ற குண்டு‘‘ல்’’லுக்கு பதிலாக பள்ளிக்கு போடும்” ள்”ஐ போட்டு வைத்திருந்தார்கள் .

ஐயோ இவனுகள திருத்தவே முடியாது போல என்று நொந்தபடியே அந்த ஓட்டலை நோக்கி ஓடினான் சேகர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *