செய்திகள்

நெல்லை தொகுதியில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் எம்.பி ராமசுப்பு

‘எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே மனு தாக்கல் செய்தேன்’ என பேட்டி

நெல்லை, மார்ச்.28-

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளராக நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு இன்று மனுவை வாபஸ் பெற்றார்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நேற்று வேட்புமனுவை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார்.

அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் ஜெகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு புறப்பட்டனர்.

அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் வெளியே வந்த ராமசுப்பு, ‘காங்கிரஸ் கட்சி சார்பில் நான் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்தது அங்கு பரபரப்பை உருவாக்கியது.

இந்தநிலையில், இன்று முன்னாள் எம்.பி. ராமசுப்பு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நெல்லை தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளேன். வேட்புமனுவை திரும்பபெறுவதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதரவாளர்களை அனுப்பி உள்ளேன். எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தேன். காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக செயல்படமாட்டேன் என்றார்.

மற்றொரு போட்டி வேட்பாளர்

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வானுமாமலை மற்றொரு போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலக்திற்கு வந்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் பிற்பகல் 3 மணிக்கு பிறகு வந்ததாக கூறி தேர்தல் அதிகாரி, அவரது வேட்புமனுவை வாங்க மறுத்துவிட்டார்.

அப்போது, வானுமாமலை நான் ஏற்கனவே டோக்கன் வாங்கிச் சென்றேன். இதுதவிர வேட்புமனுவுடன் 3 மணிக்குள் கலெக்டர் அலுவலகம் வந்துவிட்டேன். அப்படி இருக்கும் போது எனது மனுவை ஏன் வாங்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும், வானுமாமலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வானுமாமலை கூறுகையில், தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே தனது வேட்புமனுவை வாங்க மறுத்துவிட்டதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *