செய்திகள்

தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்; 93 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி: சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை, நவ.28–

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93 ஆயிரம் நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் நடந்து செல்பவர்களை பல இடங்களில் தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் சென்னை ராயபுரம் ஜி.ஏ. சாலையில் நடந்து சென்று பள்ளி குழந்தைகள் உள்பட 29 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து 29 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரோட்டில் சென்றவர்களை கடித்து குதறிய வெறிநாயை பொதுமக்களே அடித்து கொன்றனர்.

இதேபோல் தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்குட்பட்ட கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், நடந்து சென்ற பெண்கள் என 8 பேரை தெருநாய்கள் கடித்துள்ளன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் விலங்குகள் நலவாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து வருகிறோம். அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. பாலூட்டும் நாய்களுக்கும், கர்ப்பமாக இருக்கும் நாய்களுக்கும், நோய்வாய்ப்பட்டிருக்கும் நாய்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்ய முடியாது. அதேநேரத்தில் கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசிகளை நாய்களுக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சுமார் 1 லட்சம் நாய்கள்

சென்னையில் உள்ள சுமார் 1 லட்சம் நாய்களை பிடித்து தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமார் 900 நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் தான் நாய்களை பிடித்து தடுப்பூசிகளை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு இடத்தில் பிடிக்கும் தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில்தான் கொண்டு விடுகிறோம்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தடுப்பூசி போடப்பட்டு பின்னர் அதே தெருவில் தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒரு பகுதிகளில் வண்ணம் தீட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *