செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு 4 வது சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

டெல்லி, ஜன. 13–

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனவரி 18 ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை 4 வது சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஏற்கனவே அனுப்பிய 3 சம்மன்களுக்கு அவர் ஆஜராகாத நிலையில் அவருக்கு 4 வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

3 வது சம்மன் அனுப்பப்பட்டதன் மறுநாள் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலமாக பாஜக தன்னை மிரட்டுகிறது. பாஜகவின் குறிக்கோள் என்னை விசாரணை செய்ய வேண்டும் என்பதல்ல. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் நான் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதுதான்” என தெரிவித்திருந்தார்.

4 வது சம்மன்

இந்நிலையில் அவருக்கு 4 வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கை வகுப்பது, அது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகளை கேட்க விரும்புவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஆயத்தப்பணிகளுக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னதாக ஜனவரி 11 ஆம் தேதி முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். டெல்லியில் குடியரசு தின நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் காரணமாக அதை ஒத்தி வைக்க வேண்டியிருந்ததாக கட்சியினர் தகவல் தெரிவித்திருந்த நிலையில், கோவா பயணம் மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி 19, 20 என மூன்று நாட்களுக்கு கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் அங்கு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் ஆஜராக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *