செய்திகள்

தி.மு.க.வுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் சக்தி பா.ஜ.க. தான்

மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

மேட்டுப்பாளையம், ஏப்.11-–

தி.மு.க.வுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பக்கூடிய சக்தி பாரதீய ஜனதாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாரதீய ஜனதா கூட்டணி பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2 நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று காலை வேலூர் கோட்டை மைதானத்தில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

வேலூர் கூட்டம் நிறைவடைந்ததும், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலமாக மோடி கோவை சென்றார். அங்கிருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி நால் ரோடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலமாக சென்றார்.

பொதுக்கூட்ட மேடையில் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் மத்திய அமைச்சர் எல்.முருகன் (நீலகிரி), மாநில தலைவர் அண்ணாமலை (கோவை), வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்) ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-– இந்த புண்ணிய பூமியில் இருந்து உங்கள் எல்லோரையும் வணங்குகிறேன். தேயிலை தோட்டங்கள் நிறைந்த நீலகிரி மலை மாவட்டத்தின் அடிவார பகுதிக்கு வந்தால் ஒரு டீக்கடைகாரனுக்கு சந்தோஷமாக இருக்காதா என்ன?

தி.மு.க.வுக்கு விடை

கொடுக்கும் சக்தி

இப்போது தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் எங்கு பார்த்தாலும் பாரதீய ஜனதாவின் ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது. தி.மு.க.வுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பக்கூடிய சக்தி பாரதீய ஜனதாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நாட்டு மக்கள் பேச தொடங்கி விட்டனர். தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்கிறது.

பொய் சொல்லி ஏமாற்றி

தொடர்ந்து ஆட்சி…

அதாவது மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி, தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவர்களுக்கு இருக்கிறது. இப்படி பல தலைமுறைகளாக ஆட்சியில் இருந்த அவர்கள், வறுமையை ஒழிப்போம் என்று சொல்வார்கள். ஆனால் ஒழிக்க அவர்கள் பாடுபடவில்லை. ஆனால் நமது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்.

இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் இந்தியாவின் திறமையை நம்பவில்லை. கொரோனா காலத்தில் அதற்கு தேவையான மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிப்போம் என்று சொன்னபோது அவர்கள் அதை நம்பவில்லை. எள்ளி நகையாடினார்கள். அதை எல்லாம் செய்ய முடியாது என்று கூறினார்கள்.

ஆனால் அந்த தொற்றுக்கு தேவை யான மருந்தை நாம் தயாரித்து, இந்தியா கூட்டணிக்கு சவால் விடுத்தோம். மேக்-–இன் இந்தியா திட்டத்தில் தடுப்பூசி தயாரித்து நமது நாட்டு மக்களுக்கு கொடுத்ததுடன், உலக அளவில் கொடுத்ததால் கோடிக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர்.

கோவை உள்பட தமிழ்நாட்டில் 2 முக்கிய நகரங்களில் ராணுவ தளவாட கட்டமைப்பு பூங்காக்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால் கோவை வளர்ச்சி மிக வேகமாக முன்னேறும். இதற்கான வாய்ப்பை தமிழகத்துக்கு பாரதீய ஜனதா கொடுத்து இருக்கிறது. வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது. கோவைக்கும் 2 வந்தே பாரத் ரெயில்கள் வருகிறது. அதுபோன்று தொழில் வளர்ச்சிக்கு உதவ கோவை-–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை தற்போது நல்ல முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியா கூட்டணி, நாட்டில் பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை விளையாடி வருகிறது. அது மிகவும் ஆபத்தானது. நாம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் வகையில் ஜல்ஜீவன் என்ற திட்டத்தை உருவாக்கினோம். அதன்மூலம் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. அந்த திட்டத்தில் தி.மு.க. அரசு, தி.மு.க.வை சேர்ந்தவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களின் வீடுகளுக்கு கொடுத்தது. தற்போது கூட கோவையில் பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிக்கவே தண்ணீர் கிடைக்கிறது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.

இன்று நமது நாடு 5ஜி என்று உலக சாதனை படைத்து வருகிறது. ஆனால் தி.மு.க. 2ஜியில் ஊழல் செய்து நமது நாட்டையே அவமானப்படுத்தியது.

ஊழல்வாதிகளை காப்பாற்று வதுதான் தி.மு.க., காங்கிரஸ் குறிக்கோளாக இருக்கிறது. நான் சொல்கிறேன்… ஊழல்வாதிகளை அகற்றுவோம், ஊழல்வாதிகளை தண்டிப்போம் என்று. ஆனால் அவர்கள் கூறுவது ஊழலை ஆதரிப்போம், ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம் என்று.

அகங்காரம், ஆணவத்தில் தி.மு.க. மிதந்து கொண்டிருக்கிறது. அந்த ஆணவத்தை தமிழகம் என்றும் அனுமதிக்காது. தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது இந்த ஆணவம்.

வாரிசு அரசியலை

அகற்றும் தேர்தல்

தி.மு.க.வின் ஒரு தலைவர் பேசும்போது, இந்த தேர்தல் மோடியை பாரதத்தை விட்டு வெளியேற்றுகிற தேர்தல் என்று பேசி உள்ளார். அவருக்கும், அவரது கட்சிக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த தேர்தல் எதற்கு என்றால், வாரிசு அரசியலை அகற்றும் தேர்தல், போதை பொருளை இந்தியாவை விட்டு விரட்டுகிற தேர்தல், ஊழலை இந்தியாவை விட்டு அகற்றுகிற தேர்தல், தேசியத்திற்கு எதிரான கொள்கை விரோத போக்கை விரட்டுகிற தேர்தல்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேட்டுப்பாளையம் கூட்டத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் மராட்டிய மாநிலம் நாக்பூர் சென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *