செய்திகள்

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்: ஸ்டாலின்

தேனி , ஏப்.11-

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள் என தேனி பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேனி தி.மு.க. வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனையும், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தையும் அறிமுகப்படுத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது உங்கள் தொகுதிக்கான எம்.பி.யை தேர்வு செய்வதற்காக மட்டுமல்ல, நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வரமுடியும். நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், மக்களைப் பற்றி இரக்கப்படும் ஒரு மனிதர் பிரதமர் ஆகும் சூழ்நிலை உருவாகும். நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், தமிழ்நாட்டை மதிக்கும் ஒருவர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

எப்படிப்பட்ட பிரதமர் வர வேண்டும் என நாம் நினைக்கி றோமோ, அதேபோல் இப்போதைய பிரதமர் மோடி, எக்காரணத்தை கொண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை மனதில் வைத்து நாம் வாக்களிக்க வேண்டும்.

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியாவை அமளியான இந்தியாவாக மாற்றிவிடு வார்கள். ஒரு தாய் மக்களாக வாழும் நம்முடைய மக்கள் மனதில் வேறுபாட்டு விதைகளை தூவி, இந்தியாவையே நாசம் செய்து விடுவார்கள்.

மற்றொரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. தேர்தல் என்பதே ஜனநாயகப்பூர்வமாக இருக்காது. மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. சட்டமன்றங்கள் இருக்குமா என்பதே சந்தேகம்.

ஒரே மொழி ஒரே மதம் ஒரே பண்பாடு ஒரே உடை ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். இவை அனைத்திற்கும் மேலாக, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்.

ஊழல் யுனிவர்சிட்டி வேந்தர்

ஊழலுக்கு ஒரு யுனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால், அதற்கு பொருத்தமான நபர், இந்தியாவில் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது! ஏன் என்றால், ஊழலைச் சட்டப்பூர்வமாக்கி தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஊழல் பணத்தை நேரடியாகக் கட்சி வங்கிக் கணக்கிற்கு வரவும் – பி.எம்.கேர்ஸ் நிதியாகவும் உருவாக்கிக் கொண்ட உத்தமர்தான் மோடி.

எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையிலேயே உழவர்கள்மேல் அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், இப்போது மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் உழவர்களுக்காக ஏன் எடப்பாடி பழனிசாமி பேச வில்லை? அவர்களுக்காக ஏன் கண்ணீர் வடிக்கவில்லை? அதற்குக் காரணமான மோடியை ஏன் விமர்சிக்கவில்லை?.

சசிகலா குடும்பத்திடம்

ஏமாந்து விடாதீர்கள்

அண்ணா தி.மு.க.வும் – பா.ம.க.வும் அன்றைக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. இந்த இரண்டு துரோகத்தையும் மனதாரச் செய்த கட்சிகள் தான் அண்ணா தி.மு.க.வும், பா.ம.க.வும். பாரதீய ஜனதா வாஷிங் மெஷினால் வெளுக்கப்பட்டு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளை தோற்கடிக்க வேண்டும். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்து விட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள்.

ஓ.பன்னீர்செல்வம் நிலைமை என்ன? 2 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை -இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த -அவரை மிரட்டி ராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பாரதீய ஜனதா தலைமை. தினகரனை மிரட்டி தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள். இப்படி பாரதீய ஜனதாவின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், – தினகரன் என்று யாராக இருந்தாலும், பாரதீய ஜனதாவுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள்.

பாரதீய ஜனதாவுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், – தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. பி-டீமாக பழனிசாமியின் அ.தி.மு.க.வை குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அண்ணா தி.மு.க.வை ஆட்டுவிக்கிறது பாரதீய ஜனதா. இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும் தமிழினத்திற்கும் -தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பாரதீய ஜனதா கூட்டத்திற்கும், துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், – பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *