செய்திகள்

தமிழ்நாட்டை நிதியில் வஞ்சித்து விட்டு பகல் வேசம் போட்டு வருகிறார் மோடி

ஆதாரங்களுடன் செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை, ஏப். 16–

தமிழ்நாட்டை, தமிழ்மொழியை வஞ்சித்துவிட்டு, நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மோடி என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டை புகலிடமாக கருதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள 9 வது முறையாக வருகை புரிந்திருக்கிறார். ஆனால், 100 முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கோவை பொதுக்கூட்ட மேடையில் நிலவிய உணர்ச்சிபூர்வமான பரஸ்பர நட்பு, தமிழ்நாட்டு மக்களிடம் காட்டிய உண்மையான அன்பிற்கு இணையாக நரேந்திர மோடியின் பகல் வேஷம் எடுபடாது என்பதை அனைவரும் அறிவார்கள். இதன்மூலம் ராகுல்காந்தி தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளார்.

இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு இலங்கை அரசோடு செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி திரும்ப திரும்ப பேசி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார். ஆனால், உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தலைமை வழக்கறிஞர் பா.ஜக. ஆட்சி அமைந்தவுடனேயே 2014 இல் ‘கச்சத்தீவு முடிந்து போன விஷயம், அதை மீட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதை மீட்க வேண்டுமென்றால் இலங்கையோடு போர் தொடுத்து தான் மீட்க முடியும்” என கூறியதை எவரும் மறுத்திட இயலாது. அதையே வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் கூறி இருந்தார். எனவே, மோடியின் இரட்டை வேடம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது.

கடந்த 10 ஆண்டுகாலமாக பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வால் ஒன்றிய அரசுக்கு கிடைத்த கூடுதல் வருவாய் ரூபாய் 26.74 லட்சம் கோடி. அதேபோல, மக்கள் மீது விதிக்கப்பட்ட பலமுனை ஜி.எஸ்.டி. வரியின் மூலமாக ஒன்றிய அரசுக்கு கிடைத்த கூடுதல் வருவாய் ரூபாய் 31.25 லட்சம் கோடி. இரண்டையும் சேர்த்தால் ஒன்றிய அரசுக்கு கிடைத்த கூடுதல் வருவாய் ரூபாய் 58 லட்சம் கோடி. இத்தகைய கொடூரமான மறைமுக வரியால் மனிதாபிமானமே இல்லாமல் ஒன்றிய அரசு வரி விதித்து வருவாயை பெருக்கி கொண்டுள்ளது. ஆனால், மாநிலங்களுக்கு வரி பகிர்வில் அப்பட்டமான பாரபட்சம் காட்டி வருகிறது.

25 கோடி மக்கள் தொகை கொண்ட தென் மாநிலங்கள் அனைத்திற்கும் சேர்த்து நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை, ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 722 கோடி. ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்து 816 கோடி. இதன்படி மொத்த வரி பகிர்வில் தென் மாநிலங்களுக்கு 10 சதவிகிதமும், உத்தரபிரதேசத்திற்கு 18 சதவிகிதமும் பாரபட்சமாக நிதி ஒதுக்கப்படுகிறது. நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டை நயவஞ்சகத்தோடு நிதி பகிர்வில் வஞ்சிக்கலாமா?

ஒன்றிய பா.ஜ.க. அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய கடன் தொகையை கடந்த 9 ஆண்டுகளில் ரூபாய் 14 லட்சத்து 56 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தது. இத்தகைய கடன் சலுகை காரணமாகத் தான் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடையாக ரூபாய் 8,000 கோடி பெற்று பிரதமர் நரேந்திர மோடி வசூல் ராஜாவாக செயல்பட்டிருக்கிறார். ஆனால், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் நிவாரணம் அளிக்க தயாராக இல்லை.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல், பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு நிதியை வாரி வழங்குகிற பிரதமர் மோடியின் இரட்டை வேடத்தை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பெருந்தலைவர் காமராஜரை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். காமராஜரை கொலை செய்ய முயன்ற இன்றைய பா.ஜ.க.வின் தாய் அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் முயன்றதை பா.ஜ.க.வால் மறுக்க முடியுமா ? எனவே, காமராஜர் பெயரை உச்சரிக்க மோடி உட்பட எந்த பா.ஜ.க.வினருக்கும் அருகதை கிடையாது.

இந்தியாவிலேயே போதையின் தலைநகரமாக மோடியின் குஜராத் மாநிலம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 2017-21 வரை உள்ள ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 2.5 லட்சம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் உள்ள முந்திரா துறைமுகத்தில் ரூபாய் 21,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

எனவே, பத்து ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மீண்டும் பாசிச, சர்வாதிகார ஆட்சி அமையாமல் தடுத்திட நாற்பதும் நமதே என்ற குறிக்கோளை அடைய இந்தியா கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவு அளிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கையில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *