செய்திகள்

டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2 வது நாளாக தாக்குதல்

டெல் அவிவ், அக். 28–

இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களின் உதவியுடன் காசாவுக்குள் முன்னேறி 2-வது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

பாலஸ்தீனத்துக்கு சொந்தமான காசா பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்த இஸ்ரேல், கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.

இந்தச் சூழலில், காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த 7-ம் தேதி சுமார் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். அத்துடன், இஸ்ரேல் ராணுவத்தினர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

2 வது நாளாக தாக்குதல்

இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் ராணுவம், கடந்த 20 நாள்களாக காசா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், டிரோன்கள் உதவியுடன் தாக்குதல் நடத்த ஏராளமான பீரங்கிகள், கவச வாகனங்களுடன் இஸ்ரேல் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தரைவழித் தாக்குதலுக்கு முன்னேற்படாக எல்லைக்குள் ஊடுருவி இஸ்ரேல் பீரங்கிகள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தின. எல்லையில் அமைந்துள்ள ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இதனைத் தொடர்ந்து இன்று 2வது நாளாக காசாவுக்குள் தரைவழியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல்–பாலஸ்தீன போரில் இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காசாவில் கடந்த 20 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரி தாக்குதலில் இதுவரை 7,326 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *