சிறுகதை

கால்கள் – ராஜா செல்லமுத்து

வெப்பம் கக்கும் ஓர் உச்சிப் பொழுதில் செருப்பில்லாப் பாதங்களாேடு ஒரு சிக்னலில் வரும் போகும் வாகனங்களைத் தேடித் தேடிச் சென்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஏழைச் சிறுமி பார்கவி.

அவள் பாதங்களில் பரவிய வெப்பம் அவள் உச்சந்தலை வரை பரவியதைப் படபடக்கும் அவள் விழிகளே சாட்சி சொன்னது.

சர்ரென விரைந்து வந்த ஓர் உயர்தர வாகனம் அந்த சிக்னலைக் கடந்து செல்வதற்கு முன் பார்கவி எங்கெங்கும் பார்த்துக் கொண்டு ஓடினாள்.

சாலையில் ஊற்றிய தாரெல்லாம் வெப்பத்தில் உருகி பாதங்களில் ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு குழம்பாக உருண்டோடியது. உடலில் பரவிய வலியைப் பொறுத்துக் கொண்டு அந்தச் சிக்னலை நோக்கி ஓடினாள்.

அவள் அப்படி ஓடுவதை அங்கு இருப்பவர்கள் பார்க்காமல் இல்லை. அனுதாபப்படுவதற்கோ அவளை அரவணைத்து ஆறுதல் சொல்வதற்காே யாரும் இல்லை. குளிரூட்டப்பட்ட வாகனங்களில் சிலர் அமர்ந்து இருந்தார்கள். இரு சக்கர வாகனங்களில் சில அமர்ந்திருந்தார்கள். அவர்களின் மொத்தப் பார்வை எல்லாம் சிக்னல் எப்போது தங்களுக்கு விழும் ? என்ற அவசரத்தில் இருந்தார்கள். அவள் எதற்காக ஓடுகிறாள்? என்று அறிவதற்கு ஆள் இல்லை .

கதவு திறந்திருக்கும் சில வாகனங்களை யாசகம் கேட்டாள். அடைத்திருக்கும் கண்ணாடியைத் திறந்தால் கூட அனல் உள்ளே வரும் என்ற நினைப்பில் சிலர் கண்ணாடிக்குள் இருந்து இல்லை என்று கைகாட்டி பார்கவியைத் துரத்தினார்கள்.

இருசக்கர வாகனங்களில் அமர்ந்திருந்த சிலர் பணம் எடுத்துக் கொடுத்தார்கள். சிலர் விரட்டினார்கள். அந்த வெப்பப் பொழுதில் குறைந்து கொண்டிருக்கும் எண்ணை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்களேயொழிய பார்கவியின் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை.

சார் பசிக்குது சார். எதாவது குடுங்க

என்று காலைத் தரையில் ஒரு இடத்தில் வைக்காமல் அங்குமிங்கும் அசைத்துக் கொண்டே யாசகம் கேட்டாள் பார்கவி

ஒரு சிலர் கொடுத்த அனுப்பினார்கள். ஒரு சிலர் அவள் மீது எரிந்து விழுந்தார்கள்.

இதைக் காரில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி. கார்க் கண்ணாடியைத் திறந்து கைநீட்டி பார்கவியை அழைத்தாள், அந்தச் சிறுமி.

வாங்க இங்கே வாங்க என்று அந்த பிஞ்சு குரல் பார்கவியை அழைக்க நம்மைத்தான் கூப்பிடுகிறார்களா? என்று சற்றும் முற்றும் திரும்பிப் பார்கவிக்குச் சந்தேகம் வந்தது.அந்தச் சிறுமி நம்மைத தான் அழைக்கிறாள் என்பதை உறுதி செய்த பிறகு ,அந்தச் சிறுமி அமர்ந்திருக்கும் காரை நாேக்கி ஓடினாள் பார்கவி.

இப்படி ஒரு சந்திப்பை அவள் இதுவரை கண்டதே இல்லை. அவள் ஓடிப்போய் கேட்கும் மனிதர்கள் எல்லாம் அவளைத் துரத்தி தான் விட்டிருக்கிறார்களே ஒழிய அவளை மனிசியாக யாரும் நினைத்ததில்லை.

அந்த சிறுமி அழைத்தது பார்கவிக்குப் பூரிப்பையும் அதே சமயத்தில் கண்ணீரையும் வரவழைத்தது.

அந்தக் காரின் அருகே சென்ற பார்கவிக்குத் தண்ணீர் கொடுத்தாள் அந்தச் சிறுமி.

குடிங்க ஏன் வெயில்ல இப்படி ஓடிட்டு இருக்கீங்க ?என்று சொல்லியபடியே காரில் இருந்து பார்கவியின் காலை பார்த்தாள் அந்தச் சிறுமி.

ஒரு இடத்தில் நிற்க முடியாமல் அங்கும் இங்கும் காலைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த பார்கவியை பார்த்தபோது

ஏன் செருப்பு வாங்கி போடலையா? என்று அந்தச் சிறுமி கேட்டபோது, அதற்குப் பதில் சொல்ல முடியாத பார்கவி லேசாகச் சிரித்துக் கொண்டாள்.

சட்டென தன் அருகில் இருந்த செருப்பை எடுத்து “இந்தா போட்டுக்கங்க” என்று பார்கவியிடம் கொடுக்க

வேண்டாம் என்றாள் பார்கவி.

இல்ல போட்டுக்குங்க. கால் சுடாது ரோடு எவ்வள சூடா இருக்கு. இதுல போய் இப்படி நடந்திட்டு இருக்கீங்களே? கால் பொத்து போகும்.

என்ற அக்கறையாக பேசினாள் அந்தச் சிறுமி. செருப்பை வாங்கி போட்டுக் கொண்ட பார்கவியின் கையில் கொஞ்சப் பணத்தையும் திணித்தாள் அந்தச் சிறுமி.

இப்போது சிக்னல் சிவப்பில் இருந்து பச்சைக்கு மாறியது.

பாத்து பத்திரமா போங்க என்றதும் செருப்பணிந்த பாதங்களோடு நகரும் வாகனங்களைத் தாண்டி ஓடி ஓரத்தில் நின்றாள் பார்கவி.

“அந்தப் பொண்ணு பாவம்மா அவளுடைய காலு இந்த வெயில்ல எப்படித் சுட்டு இருக்கும் ” என்று காரில் அருகே அமர்ந்திருந்த தன் அம்மாவிடம் பேசினாள் அந்தச் சிறுமி .

ஆமாம்மா ,ரொம்ப வெயில். நிச்சயமா அந்தப் பொண்ணுக்கு கால் எல்லாம் சுட்டுத் தான் போயிருக்கும் என்று சொல்லியபடியே அந்தச் சிறுமியின் கால்களை நீவி விட்டாள் அந்தச் சிறுமியின் தாய். அந்தச் சிறுமிக்கு இரண்டு கால்களும் இல்லாமல் இருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *