செய்திகள் நாடும் நடப்பும்

பசுமையை அதிரித்து வெப்பநிலையைக் குறைக்க அரபு அமீரகத்தில் உலகத் தலைவர்கள் சங்கமம்

புதிய உச்சத்தில் புவி வெப்பம்


ஆர். முத்துக்குமார்


உக்ரைன், இஸ்ரேல் போர் பதட்ட சூழ்நிலைகளிடையே ஐநா சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையைப் பற்றி யாருக்கும் கவலையின்றி இருப்பதில் வியப்பில்லை!

இந்த ஆண்டிற்கான அறிக்கைக்கு ‘Broken Record’ ‘உடைந்த சாதனைகள்’ என பெயர் வைத்துள்ளனர். ஆங்கிலத்தில் இந்த பெயருக்கு இரு வேறு பொருள்கள் இருக்கிறது.

ஒன்று முந்தைய உச்சத்தை தாண்டி விட்டோம்; அதாவது சராசரி வெப்பநிலையை இந்த முறை கடந்து புது உச்சத்தை எட்டி இருப்பதால் முந்தைய சாதனைக் குறியீடு கடந்ததைக் குறிப்பிட்டு இருக்கலாம்!

சென்னதையே திரும்பத் திரும்பச் சொல்வோம் அல்லவா? கீறல் விழுந்த இசை தட்டைப் போல் சொன்னதையே சொலிக் கொண்டிருப்பதையும் Broken Record என்று கூறுவோம் அல்லவா?

இம்முறை அறிக்கையிலும்

‘‘உமிழ்வுகள் – காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகள் மிகவும் மந்தநிலையில் இருக்கின்றன. இந்தப் போக்கை உலகம் மாற்றிக் கொள்ளா விட்டால் ஒவ்வொரு ஆண்டும் கீறல் விழுந்த இசைத் தட்டைப் போல நாங்களும் இதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கும்’’ என்று அறிக்கையை வெளியிட்ட சுற்றுச்சூழல் அமைப்பினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

உலக நாடுகளின் கழிவுப்பொருயள் உமிழ்வுகள் – காலநிலை பற்றிய பல தரவுகள் அந்த அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது உலகளாவிய சராசரி வெப்பநிலை பற்றிய எதிர்கால கணிப்பு. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது உலகளாவிய சராசரி வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்து விடக்கூடாது என்பதே காலநிலைச் செயல்பாடுகளின் முதன்மை இலக்கு.

2015ல் பாரிசில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் போகாமல் இருக்க முயற்சிகள் எடுப்போம் என்று உலக நாடுகளிடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இது ‘பாரிஸ் ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசைத் தாண்டி அதிகரித்தால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால் அந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதையொட்டியே ஒவ்வொரு காலநிலை உச்சி மாநாட்டிலும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

ஆனால் இப்போது வெளி வந்திருக்கும் உமிழ்வு சார்ந்த அறிக்கையில் தற்போதைய செயல்பாடுகளை உலக நாடுகள் அப்படியே தொடரும் பட்சத்தில் இந்த நூற்றாண்டுக்குள் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 2 டிகிரி செல்சியஸைத் தொட்டு விடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது உச்சரம்பையும் மீறி ½ டிகிரி செயல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என்பது தெரிய வந்திருக்கிறது.

நடப்பு ஆண்டில் இதுவரை 86 நாட்களில் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. வருடாந்திர சராசரி வெப்பநிலை உயர்வு தான் கணக்கில் கொள்ளப்படும் என்றாலும் ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட கால்வாசி நாட்களில் உச்சவரம்பு தாண்டப்பட்டிருக்கிறது என்பது நிச்சயமாக ஒரு எச்சரிக்கைத்தான். ‘நாம் உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது’’ என்று காலநிலை ஆராய்ச்சியாளர்கள். அதிலும் குறிப்பாக செப்டம்பர் மாதத்தின் சில நாட்களில் உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

உமிழ்வுகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் இந்த அறிக்கை விரிவாகப் பேசுகிறது. உலகிலேயே அதிக வருமானம் கொண்ட 10% மக்கள், உலகளாவிய உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 48% க்கு காரணமாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வளர்ச்சியடைந்த நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்களது உமிழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகள், வறியவர்களையும் 3 ம் உலக நாடுகளையுமே அதிகமாகத் தாக்கும் என்பதைத் தனியாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தச் சூழலியல் அநீதியைக் காலநிலை மாற்றத்தின் மிக மோசமான பின்விளைவு என்றே சொல்ல வேண்டும்.

பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 97 நாடுகள், நிகர பூஜ்ஜிய உமிழ்வுகளை நோக்கிச் செயல்படுவதாக உறுதியளித்திருக்கின்றன. அதாவது வெளியிடப்படும் பசுங்குடில் வாயுக்களுக்குச் சமமான அளவில் வளிமண்டலத்தில் இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் நீக்கப்படும்போது மட்டுமே நிகர உமிழ்வு பூஜ்ஜியமாக இருக்கும். இதை நடத்திக் காட்டுவதாகப் பல நாடுகள் உறுதிமொழி அளித்திருந்தாலும் அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப் படவில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இன்னும் வேதனையான ஒரு தகவல் என்னவென்றால் ஒருவேளை இந்த 97 நாடுகளும் நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்கு வந்தால்கூட உலகளாவிய சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்வதற்குச் சாத்தியம் இருக்கிறது..

மெல்ல நாம் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகிறோம். இது ஒரு வகையில் வாகனக் கரும்புகை வெளியேற்றத்தில் மிகக் குறுகிய சதவிகிதத்தை குறைக்கலாம்.

வாகனத் தயாரிப்பாளர்கள் பல புதுப்புது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதால் மின்சார வாகன துறையும் மின்சார ரீசார்ஜ் தொழில்நுட்பங்களும் புதுப்புது மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது.

3000 துறைமுகங்களில் கையாளப்படும் சரக்கு கப்பல்கள் பல ஆயிரம் மட்டும் என்றாலும் தினமும் அவை வெளியேற்றும் கரும்புகை சமாச்சாரமும் சுற்றுச்சூழலுக்கான பாதிப்பும் 2 நாட்களுக்கு வாகன கரும்புகைக்கு ஈடானதாக இருக்கிறதாம்.

ஆகவே துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துக்களில் நவீன தொழில்நுட்பங்கள் மிகத் தேவையான ஒன்றாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 4% உமிழ்வுகளைக் குறைத்தால் மட்டுமே உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. காலநிலை பற்றிய முக்கிய முடிவுகளுக்கான தளமான காலநிலை உச்சிமாநாடு 28 (UN Conference of Parties 28 – COP 28) டிசம்பர் 12ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

வாகன போக்குவரத்தின் உந்துதல் சக்தியான பெட்ரோல், டீசல்களின் விளை நிலத்தில் இப்படி ஒரு அதிமுக்கிய மனிதகுல மேம்பாட்டு சமாச்சாரம் பற்றிய விவாதம் நடைபெறுவது பொருத்தமான இடம் என்று புரிகிறது.

ஆனால் இன்றைய தலைவருக்கான காரணகர்த்தாக்கள் பல லட்சம் கோடி முதலீடுகள் செய்து பெரும் பணம் சம்பாதிக்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மூடச் சொல்லும் நிலை வந்துக் கொண்டிருக்கும் தருவாயில் தேனை கையிலும் வாயிலும் பட வைத்து விட்டு நக்காதே என்று உலகமே சொல்வது போல் மாறி விடக் கூடாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *