செய்திகள்

குற்ற வழக்கு விளம்பரங்களை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்

சென்னை, மார்ச்.21-–

குற்ற வழக்குகள் குறித்த விளம்பரங்களை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் வெளியிட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் (நிலுவையில் உள்ளவை மற்றும் தண்டனை விதிக்கப்பட்டவை) தொடர்புடைய வேட்பாளர்கள் மற்றும் குற்ற வழக்குகள் தொடர்புள்ள வேட்பாளர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை இந்திய தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

அதற்காக தேர்தல் கமிஷன் சில படிவங்களை வரையறுத்துள்ளது.

குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியை பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சியின் வலைதளங்களில், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பாக, இவற்றில் எது முதன்மையானதோ அதன்படி வெளியிட வேண்டும்.

குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியை வெளியீடு செய்தது தொடர்பான அரசியல் கட்சியின் அறிக்கையை, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து 72 மணி நேரத்திற்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டதற்கு 2 வாரத்திற்கு முன்பாக, இவற்றில் எது முந்தையதோ, அதன்படி அளிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அதற்கான படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், அந்த வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் மற்றும் தங்களது அரசியல் கட்சியின் வலைதளங்களிலும் அதற்கான படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இந்த விளம்பரங்களை, வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளுக்கு அடுத்த நாளில் இருந்து வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை 3 முறை வெல்வேறு நாட்களில் வெளியிட வேண்டும்.

இது தொடர்பான இந்திய தேர்தல் கமிஷனின் முழுமையான அறிவுரைகள் மற்றும் பதிப்புகள் வாரியான தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு சொத்துகளில் இருந்த

அரசியல் விளம்பரங்கள்…

அரசு மற்றும் தனியார் சொத்துகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை அகற்றுமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள், கட்அவுட்டுகள் போன்ற விளம்பரங்களை அகற்றுமாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கேபினட் செயலாளர் மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த விளம்பரங்களை உடனடியாக அகற்றி 24 மணி நேரத்துக்குள் அறிக்கை அனுப்புமாறும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *