செய்திகள்

யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4–ந்தேதிக்கு பிறகு தெரியும்

அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் கருகிப் போய் விடுவார்கள்

அரியலூரில் எடப்பாடி ஆவேசப் பேச்சு

அரியலூர், ஏப்.14-

“யார் காணாமல் போவது என்று மக்கள் முடிவு செய்வார்கள். அண்ணா தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் கருகிப்போய் விடுவார்கள்” என்று அரியலூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சிதம்பரம்(தனி) நாடாளுமன்ற தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனுக்கு அரியலூர் மாவட்டம், குருமஞ்சாவடி அருகே நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

அண்ணா தி.மு.க. காணாமல் போய்விடும் என்று சிலர் கூறுகின்றனர். ஜூன் 4ந்தேதிக்கு பிறகு யார் காணாமல் போவது என்று மக்கள் முடிவு செய்வார்கள். இந்த கட்சி தெய்வ சக்தி உள்ள கட்சி. இதனை யார் அழிக்க நினைத்தாலோ அல்லது முடக்க நினைத்தாலோ அல்லது உடைக்க நினைத்தாலோ அவர்கள் கருகிப்போய் விடுவார்கள்.

மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக கூறுகிறார். என்ன திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்?. 3 ஆண்டுகள் காலத்தை கடத்தியதுதான் மிச்சம். மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கொடுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அண்ணா தி.மு.க. 27 மாதங்கள் சட்டசபையில் தொடர்ந்து போராடியதன் காரணமாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து மகளிருக்கும் கொடுக்கப்படவில்லை. 70 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதுதான் தி.மு.க. கட்சி.

குடும்பத்தை பற்றி மட்டும்

கவலைப்படும் ஸ்டாலின்

டீக்கடையில் டீ குடிப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இல்லையென்றால் நடைப்பயிற்சி செல்வார். இதைத்தவிர வேறு என்ன செய்திருக்கிறார்?. ஸ்டாலின் நடைபயிற்சி செய்யும்போது அவருடன் வந்த சுகாதார அமைச்சரிடம், தனது மகன் நடித்த கழகத்தலைவன் திரைப்படம் எப்படி உள்ளது என்று கேட்கிறார். மக்கள் மீது அக்கறை இல்லாமல், நடைபயிற்சி மேற்கொள்ளும்போது கூட குடும்பத்தினர் பற்றி கவலைப்படும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும்தான்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழ்நாடு போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக காட்சி அளிக்கிறது. தி.மு.க.வின் மாநில நிர்வாகி அயலக அணி பொறுப்பாளராக இருக்கக்கூடிய ஒருவர், போதைப்பொருள் கடத்தும் பணியை செய்தார். அதிகாரிகள் அவரை கைது செய்தனர். போதைப்பொருள் ஆசாமியுடன் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினும் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஸ்டாலின் கனவு

ஒருபோதும் பலிக்காது

ராகுல்காந்தியை கூட்டிக்கொண்டு வந்து கோவையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசுகிறார். அப்போது காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவேன் என்று ஸ்டாலின் கூறினார். முன்பாவது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் இருந்தது. தற்போது, கூட்டணி சேர்ந்தபிறகு அதையும் இழந்துவிட்டது. ஸ்டாலினின் கனவு ஒருகாலும் பலிக்காது. அண்ணா தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

அண்ணா தி.முக. ஆட்சியில், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம். தி.மு.க. வந்தபிறகு மும்முனை மின்சாரம் தடைபட்டது. மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். அதை நம்பி விவசாய குடும்பத்தை சேர்ந்த அனைத்து மகளிரும் தங்களது நகைகளை அடகு வைத்து பணத்தை செலவு செய்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு, தகுதியானவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டார்கள். எனவே வருகிற தேர்தலில் சந்திரகாசனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *