செய்திகள் நாடும் நடப்பும்

உலக அமைதிக்கு வழிகாணத் தயங்கும் அமெரிக்கா

வலுவான குரல்களை புறக்கணித்து விட்ட ‘முனிச் பாதுகாப்பு மாநாடு’


ஆர். முத்துக்குமார்


இவ்வார துவக்கத்தில் உலக அமைதிக்கு ஏதேனும் வழி பிறக்கும் சங்கதிகள் பற்றி விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ‘முனிச் பாதுகாப்பு மாநாடு’ தீர்வு நோக்கி எந்த அணுகுமுறையையும் ஏற்காது இருந்தது பலருக்கு ஏமாற்றத்தையும், அமைதியை விரும்புவோருக்கு நெருடலாகவும் இருந்தது.

கடந்த 60 ஆண்டுகளாக நடைபெறும் இம்மாநாடு இணைந்து செயல்படவும், ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்க வசதியாக புறக்கணித்தல் கூடாது என இயங்கிக் கொண்டிருந்த இவ்வமைப்பு இம்முறை உலகமே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருக்கும் உக்ரைன் விவகாரத்திற்கும், இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்களுக்கும் தீர்வு காண ஏதுவாக ஐரோப்பிய தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதினை அழைக்கவில்லை. மேலும் நாட்டோவை மூடிவிடப்போகிறேன் என தொடர்ந்து பேசி வரும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்புக்கும் அழைப்பு தரப்படவில்லை.

அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வந்திருந்தார். உலகத் தலைவர்கள் பலரும் குழுமி இருந்தனர். அவர்கள் அனைவரும் புதின் வந்தால் அவருடன் விவாதிக்கலாமே, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மறைவில் உண்மையில் கொலையா? என்ற விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் அல்லவா?

அதுமட்டுமா? சமீபமாக ‘நாட்டோ’வை குறை கூறுவதுடன் ஐரோப்பிய நாடுகள் இனி அமெரிக்காவை தலைமையாக கொண்டு நடத்தும் யுத்தங்களுக்கு அவர்களே செலவு செய்து கொள்ளட்டும் என கூறி வருகிறார்.

அதாவது இனி அமெரிக்கா பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டு, நிதி உதவிகள் செய்து கையை பிசைந்து கொண்டு இருக்காதாம்.

நிதி உதவி என்றால் கடனாக தருவார்களாம், அதை முன்போ எப்படி திருப்பி தருவது என்பதையும் கூறிவிட வேண்டும் அல்லவா?

உதாரணத்திற்கு உக்ரைனுக்கு இனி நிதி உதவிகளையோ, ஆயுத சப்ளைகளையோ செய்யாது என அவர்களது சட்டமன்றம் முடிவு செய்துவிட்டது. ஜனாதிபதி பைடன் எப்படியாவது உக்ரைனுக்கு நிதி உதவியையும், சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் தர தீவிரம் காட்டி வருகிறார்.

ஆனால் டிரம்போ அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கத் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் இத்தருணத்தில் ரஷ்யா எதிரி நாடாக கருதி இனியும் உக்ரைன் வழியாக யுத்தம் செய்வது வீண் செலவு என கூறி வருகிறார்.

ஆக பல லட்சம் கோடி டாலர் செலவுகள் நிறுத்தப்பட்டால் அமெரிக்காவின் பொருளாதாரம் ஸ்திரமாக மாறும் என சாமானியர்கள் உணரத் துவங்கி விட்டனர்.

அதன் எதிரொலியாய் பைடனுக்கு இருந்த ஆதரவு அலை எதிர்மாறாய் மாறி எதிர்ப்பு அலையாய் மாறி வருகிறது. இந்த கட்சிக்களுக்கிடையே டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதும் உறுதியாகி வருகிறது.

அப்படிப்பட்ட வலுவான ஒரு குரலை ‘முனிச் பாதுகாப்பு மாநாடு’ புறக்கணித்து இருக்கக்கூடாது.

உண்மையின் புதின், டிரம்ப் ஆகியோரின் நிலைப்பாடுகள் உலக அமைத்திக்கான வழிகளை தேடுவோர் ஆர்வமாக கேட்டு வரும் நிலையில் உலகத் தலைவர்கள் அதை உதாசீனப்படுத்தி இருப்பது இத்தருணத்தில் தவறான அணுகுமுறையாகத் தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதி பைடனும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ரஷ்யாவை எதிர்ப்பதிலும், இஸ்ரேல் விவகாரத்தில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி விட்டு தள்ளி நின்று குளிர் காய்வதுமாய் இருக்கையில் தற்போதைய முனிக் பாதுகாப்பு மாநாடு எந்த நடவடிக்கையையும் எடுக்க தவறி விட்டது. உலக அமைதியை விட ரஷ்யாவை மட்டம் தட்டி, வீழ்த்தி விடுவதில் மட்டுமே குறியாய் இருப்பது புரிகிறது.

சீனாவும், இந்தியாவும் இம்மாநாட்டின் போது பல மாதங்களுக்குப் பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் மனம் திறந்து பேசிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது, அதை உரிய முறையில் இரு நாடுகளுமே பொறுப்புடன் செய்ததை பாராட்டியே ஆக வேண்டும்.

சீனாவும், மேற்கத்திய நாடுகளின் போக்கு தங்களது வல்லரசு கனவு மெய்யாவதை கண்டு பொறுக்காமல் இப்படி குளறுபடி அரசியலை அவிழ்த்து விட்டு வருகிறார்கள் என கூறியுள்ளது.

இந்திய அமைச்சரோ ரஷ்யாவையும், அமெரிக்காவையும் விட்டுக் கொடுக்காமல் புதுயுக அணிசேரா கொள்கையை பின்பற்றக் காரணம் என்ன? என்பதையும் விவரித்து விளக்கம் தந்திருப்பது நமது எதிர்கால கொள்கைகள் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு நல்ல சான்றாக இருக்கிறது.

உலகம் இரண்டு பட்டிருப்பதை மாற்றிட வழி காண முயற்சிக்காத இந்த பாதுகாப்பு மாநாடு எந்த பயனும் தராத ஓர் பாதுகாப்பு மாநாடு என்றே வரலாறு பேசும்.

2 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் தாக்குதல்கள் இனி எத்தகைய வீரியத்துடன் தொடரும் என்பதை ரஷ்ய தரப்பில் இருந்து வெளி வர இருந்த ஓர் தளம் அதற்கு வழியின்றி அவர்களை புறக்கணித்து இருப்பதும் மேற்கத்திய நாடுகள் அமைதி திரும்புவதை பற்றி அக்கறையின்றி இருக்கிறார்களே என்று தெற்குலக நாடுகள் அதிருப்தியை தெரிவித்து மாநாட்டை நிறைவு செய்துள்ளனர்.

ஆக, தற்சமய யுத்த நிகழ்வுகள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர தெற்குலக நாடுகள் குறிப்பாக இந்தியா, வளைகுடா நாடுகளின் முயற்சி மட்டுமே பலன் தரும் என்பது புரிகிறது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *