செய்திகள்

காசா மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 15 பேர் பலி

டெல் அவிவ், நவ.4

காசாவில் உள்ள அல்–ஷிபா மருத்துவமனையின் முன்பு இருந்த அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 60 பேர் காயமடைந்துள்ளனர்.

அவசர ஊர்திகளில் மோசமான நிலையில் உள்ள நோயாளிகள், ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்படவிருந்ததாகக் காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது. ”ஒட்டுமொத்த உலகத்துக்கும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். இவை மருத்துவ அவசர ஊர்திகள் தான்” என்று காசாவின் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார்.

மருத்துவ அவசர ஊர்திகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் இருந்ததாகவும் தெரிகிறது.

இஸ்ரேலிய வீரர்கள் போர்ப் பகுதியில் இந்த வாகனங்களை ஹமாஸ் பயன்படுத்தியதைக் கண்டறிந்ததாகவும் அதனாலே தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் தங்களின் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை இடம் மாற்ற அவசர ஊர்திகளைப் பயன்படுத்துவதாகவும் இந்தத் தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மருத்துவ வசதி

இல்லாமல் திணறல்

காசாவின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல்-ஷிபா மருத்துவமனை கூட்ட நெரிசலைச் சந்தித்து வருகிறது. காசாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் முடங்கியுள்ள நிலையில் இந்த மருத்துவமனையும் போதிய மருத்துவ வசதி வழங்க இயலாது வகையில் திணறி வருகிறது.

இதுவரை பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 9,200. மேலும், காயமுற்றவர்கள் எண்ணிக்கை 23,500.

இந்த நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *