செய்திகள்

ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு: ராகுல்

டெல்லி, டிச. 01–

ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதியின் சுல்தான் பத்தேரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய கட்டடத்தை ராகுல் காந்தி நேற்று திறந்து வைத்து ராகுல் காந்தி பேசியதாவது:–

இந்தியாவில் ஏழைகள் தான் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் சென்ற போது கிடைத்த அனுபவத்தில் இருந்து இந்த பிரச்னையை நான் முழுமையாகத் தெரிந்து கொண்டேன்.

மேலும், சிறந்த மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு ஏழை மக்களிடம் பணம் இல்லை. நமது நாட்டில் பணம் இருந்தால்தான் நல்ல மருத்துவ வசதி கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு

வசதி இல்லாததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் ஏழை, எளிய மக்கள் உயிரிழக்க நேரிடுகிறது. ஏழைகளுக்கு புற்றுநோய், இதய நோய் போன்ற பெரிய நோய்கள் வந்தால் அவர்கள் சிறந்த மருத்துவ வசதியைப் பெற முடியாமல் உயிரிழக்க நேரிடுகிறது. இதனால், அவர்களை நம்பி இருக்கும் குடும்பமும் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் மாநில அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும்.

நமது நாட்டில் பல்வேறு மருத்துவமனைகள் வர்த்தகமயமாகி, லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும் என்றார்.

ராஜஸ்தானில் சிரஞ்சீவி மருத்துவக் காப்பீடு என்ற பெயரில் இத்திட்டம் அமலில் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றால் காப்பீட்டுத் தொகையை ஏழைகள், நடுத்தர மக்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்துவோம் என அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *