செய்திகள்

ஒடிசாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு; ஜன்னல் கண்ணாடிகள் சேதம்

புவனேஸ்வர், நவ.7–

ஒடிசாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு நடந்ததில், ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தது.

ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி 20835 என்ற எண் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

ஒடிசாவின் தேன்கனல்–அங்குல் ரெயில்வே பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகருக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் ரெயில் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில், ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை

இதுபற்றி பணியில் இருந்த ரெயில்வே போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ரெயில்வே பாதுகாப்பு படையின் உதவி பாதுகாப்பு ஆணையாளர் கட்டாக்கில் இருந்து சம்பவ பகுதிக்கு உடனடியாக வந்து ஆய்வு செய்தார்.

இதுபற்றி ரெயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் பற்றி உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கற்களை வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை கண்டறியும் பணியில், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கிழக்கு கடலோர ரெயில்வே மண்டல பாதுகாப்பு பிரிவினரும் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும் பயணிகள் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *