செய்திகள்

‘‘என் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன்’’

கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, அக். 31–

என் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன் என்று கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் கடந்த 25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் மீது கிண்டி போலீசார் பிணையில் வரமுடியாதபடி 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்திருந்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் மறுநாள் அதிகாலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணியை முழுமையாக கண்டறிய, கருக்கா வினோத்தை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து கருக்கா வினோத்தை கிண்டி போலீசார் நேற்று புழல் சிறையில் இருந்து காவல் வாகனத்தில் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அவரை அழைத்து வந்தனர். அப்போது, ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும், தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசினேன்’ என கருக்கா வினோத் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கருக்கா நாகராஜனிடம் விசாரணையை தொடங்கினர். சென்னை கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்து கருக்கா வினோத், போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

சிறையில் இருந்து வெளியே வந்த பின் நான் யாரையும் சந்திக்கவில்லை. சிறையில் இருந்த சமயத்தில் நீட் தொடர்பான தற்கொலை செய்திகளை படித்தபோது மன உளைச்சல் ஏற்பட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நீட் தேர்வு இருந்தால் என் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு வீசினேன். பிஎப்ஐ அமைப்பினருக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கவர்னர் கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *