செய்திகள்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது: திருச்செங்கோட்டில் எடப்பாடி குற்றச்சாட்டு

திருச்செங்கோடு, ஏப்.13-–

‘தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டதாக’ திருச்செங்கோட்டில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து நேற்று திருச்செங்கோட்டில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை தாங்கினார். இதில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–-

மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நியாயம், தர்மம் எங்கே இருக்கிறதோ அங்கு மக்கள் இருப்பார்கள். இதனால் வெற்றி நம் பக்கம் உள்ளது. நாட்டிற்கு ஒரு முதலமைச்சர் தான் தேவை. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. குடும்ப ஆட்சியில், 4 முதலமைச்சர்கள் உள்ளனர். மு.க.ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஆகிய 4 முதலமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

10 ஆண்டுகால அண்ணா தி.மு.க. ஆட்சியை இன்றைய 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியுடன் ஒப்பிட்டு பாருங்கள். கடுமையான விலைவாசி உயர்வு. 2021–-க்கு முன்னால் எப்படி இருந்தது என்றும், 2021–-க்கு பிறகு எப்படி இருக்கிறது என்றும் சிந்தித்து பாருங்கள். மக்களுக்கு எந்தெந்த நன்மை கிடைத்தது என்று சிந்தித்து பாருங்கள். அண்ணா தி.மு.க. ஆட்சி மக்கள் ஆட்சி, தி.மு.க. ஆட்சி அதிகார ஆட்சியாக உள்ளது.

சட்டம், ஒழுங்கு அடியோடு சீரழிவு

இப்போது எங்கு பார்த்தாலும் கொள்ளை, கொலை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை சட்டம், ஒழுங்கு அடியோடு தமிழகத்தில் சீர்கெட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முதியோர்களை குறிவைத்து பணம், நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாத கையாலாகாத ஆட்சியாக உள்ளது.

சட்டம், ஒழுங்கு சரியாக இருந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும். சட்டம், ஒழுங்கு கெட்டால் பின்னுக்கு தள்ளப்படும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது. தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணா தி.மு.க. ஆட்சியில் 7 பாலியல் வழக்குகள் பதியப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் 52 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எந்தளவுக்கு நடந்துள்ளது என்று பாருங்கள்.

தொழில் செய்வதே சிரமம்

தி.மு.க. ஆட்சியில் தொழில் செய்வதே சிரமமாக உள்ளது. லாரி, ரிக் தொழில் இரண்டும் சரிவடைந்து விட்டது. லாரி, லாரி உதிரிபாகங்கள், டீசல் விலை உயர்ந்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் விலை உயர்வு இல்லாமல் பார்த்துக்கொண்டோம். டீசல் விலை உயர்வால், வாடகை உயர்கிறது. வாடகை உயர்வதால் பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அண்ணா தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தற்போது தொழிற்சாலைகளில் நிலைமை கேள்வி குறியாக உள்ளது. மக்கள் இதனை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்தது. தற்போது இருக்கும் தி.மு.க. ஆட்சியால் சாமானிய மக்கள் கனவில் மட்டுமே சொந்த வீடு கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்க மானியம் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ஆகியவற்றை தி.மு.க. அரசு ரத்து செய்துவிட்டது. திருச்செங்கோடு பகுதியின் பிரதான தொழிலான விசைத்தறி தொழில் அழிந்ததற்கான காரணம் தி.மு.க. ஆட்சி. அண்ணா தி.மு.க. ஆட்சி மலரும் போது விசைத்தறி தொழில் மீண்டும் மலரும்.

போதைப்பொருள் தாராளம்

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப் பொருள் விற்கப்படுகிறது. கஞ்சா அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதை கட்டுப்படுத்த ஸ்டாலினால் முடியவில்லை. போதை பொருள் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. தி.மு.க., அயலக அணி நிர்வாகி ஒருவர் வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதாக வழக்கில் சிறையில் உள்ளார்.

திருச்செங்கோடு தி.மு.க. கவுன்சிலர் கணவர் கள்ளச்சாராயம் தயாரித்து பாரில் விற்பனை செய்வதாக தற்போது செய்தி வந்துள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டிலும் இந்த விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் இறந்துவிட்டனர். விபத்தில் காயமடைந்தால் பணம் தரமாட்டார்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால், 10 லட்சம் ரூபாய் வழங்குவார்கள். இங்கு ரூ.5 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராயத்தை பிடித்துள்ளனர். மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு தனி நிதி ஒதுக்கி கான்கிரீட் வீடு அமைத்து தருவோம் என உறுதியளிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் சேகர், சுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி. பாஸ்கர், பொன்.சரஸ்வதி, தே.மு.தி.க. செயலாளர் விஜய் சரவணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வக்கீல் சந்திரசேகர், அண்ணா தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் மணக்காட்டார் சின்னுசாமி மற்றும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *