செய்திகள்

ஊட்டியில் உறைபனி தாக்கம்: 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

ஊட்டி, ஜன. 18–

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த மாதங்களில் நீர்ப்பனிப்பொழிவு அதிகரித்து, பின்னர் உறைபனியின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டும்.இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதன்படி தற்போது ஊட்டியில் உறைபனி மற்றும் நீர்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.இன்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி தீர்த்தது. இதனால் தாவரவியல் பூங்காவில் பிரதானமாக அமைந்து உள்ள புல்தரைகள் மற்றும் ஊட்டி குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் இருக்கும் புல்தரைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தற்போது வெள்ளை கம்பளி போர்த்தியது போல வெண்மையாக காட்சி அளிக்கிறது.

2.8 டிகிரி செல்சியஸ்

மேலும் சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.ஊட்டியில் தற்போது வழக்கத்தை விட கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அங்கு இன்று காலை குறைந்தபட்ச அளவாக 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உறைபனியுடன் தற்போது கடுங்குளிரும் நிலவி வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் வீட்டின் முன்புறம் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *