செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பஸ் மோதி விபத்து: தாய் – மகள் பலி

உளுந்தூர்பேட்டை, ஜன. 29–

உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை கார் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுக்காவில் உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி. இவரது மனைவி ஜெயா (40), அந்தப் பகுதியில் மகளிர் சுய உதவி குழு ஒன்றின் தலைவியாக இருந்தார்.இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழு கடன் உதவி பெற சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கையொப்பமிட ஜெயா அழைக்கப்பட்டார். இதற்காக தனது கணவர் மற்றும் 2 மகள்களான வசந்தி (18), வைதேகி (14) ஆகியோருடன் நேற்று இரவு சென்னைக்கு காரில் புறப்பட்டார். காரை ஜெயாவின் கணவர் அழகுராசு ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிட்கோ எதிரில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் பின்னால் ராமேஸ்வரத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற சுற்றுலா பஸ், காரின் மீது அதிவேகமாக மோதி சாலையின் இடது புறம் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெயா மற்றும் அவரது மூத்த மகள் வசந்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அழகுராசு, மற்றொரு மகள் வைதேகி மற்றும் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தின் காரணமாக திருச்சி – -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த எடக்கல் போலீசார், அந்த பகுதி பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் தாய், மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *