செய்திகள் நாடும் நடப்பும்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: உலக நாடுகள் வரவேற்பு

அமைதி என்றும் நிலவ களம் இறங்க இந்தியா தயார்


ஆர்.முத்துக்குமார்


அக்டோபர் 7, பாலஸ்தீன ஆயுதம் ஏந்திய போராளிகள் காசா எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்திட இரு நாளில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மீது எதிர்தாக்குதலை துவக்கியது. அதன் தொடர்ச்சியாய் இரு தரப்புகளிடம் இருந்தும் தாக்குதல்கள் தொடர, அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல்கள், அதில் பலர் மரணம் போன்ற செய்திகளே ஊடகங்களில் பிரதானமாய் இடம் பிடித்தது.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக அணி திரட்டும் பணிகளில் ஈடுபட, உக்ரைன் யுத்த காட்சிகள் மெல்ல ஊடகங்களில் பார்வையில் இருந்து மறைய துவங்கி வருகிறது!

உக்ரைன் பிரச்சினை தீர்ந்ததா? ஆப்கானில் சகஜ வாழ்க்கை நிலை வந்துவிட்டதா? இதுபற்றி எந்த தகவல் திரட்டும் கிடைக்காத நிலையில் ஊடகங்களின் பார்வை இஸ்ரேல் – பாலஸ்தீன நடவடிக்கைகள் மீது பாய்ந்து இருப்பது ஏன்? என்று புரிகிறது.

எது எப்படியோ, கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக போர் நிறுத்தம் என இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் அறிவித்ததைத் தொடர்ந்து வெடிச் சத்தங்கள் நின்றுவிட்டது. நிசப்தம் நிலவுவதுடன் இரு தரப்பினராலும் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருக்கும் பலரை அதிகாரபூர்வமாக பத்திரமாக விடுவித்து வருவதை ஊடகங்களில் பார்க்கும்போது ஆறுதலாகத் தான் இருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் 7–-ம் தேதி இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 240 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14,800 பேர் வரை உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.இத்தகைய தாக்குதல்கள் கடந்த 40 ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போதைய போர் நிறுத்தம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான் என்றாலும் அது நிரந்தரத் தீர்வு என்பதாக தெரியவில்லை.

மத, இன சச்சரவுகள் மட்டுமின்றி எண்ணை வளத்தை ஆதிக்கம் செலுத்தும் உரிமையை இரு தரப்பும் விட்டா கொடுக்கும்!

இஸ்ரேலின் அருகாமை கடல் பகுதியான பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் மிகப்பெரிய புதையலாய் இயற்கை எரிவாயு வெளியே எடுக்கப்படாமல் இருக்கிறது.

அருகாமை எண்ணை வள நாடுகளின் கையிருப்பை விட மிக அதிகமான வளம் இங்கு இருக்கிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டோ நாடுகள் நேரடியாக ஆதரவு தெரிவித்து நட்பு நாடாக அறிவித்துள்ளது.

பாலஸ்தீனர்கள் காசா அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி சர்வதேச அமைப்புகளில் தங்களது உரிமையையும் நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகிறது.

இஸ்ரேலுக்கு வல்லரசுகளின் ஆதரவு இருப்பதால் இதுவரை பாலஸ்தீன மக்கள் எந்த செல்வசெழிப்பு நன்மையையும் அனுபவிக்க முடியாது திணறுகிறார்கள்.

பாலஸ்தீனர்கள் ஜனநாயக முறையில் தேர்வு செய்த ஆட்சியாளர்கள் ஹமாஸ் குழுமம் பதவி ஏற்றாலும் அவர்கள் ஐ.நா. உட்பட எந்த சர்வதேச அமைப்பின் அங்கீகாரத்தையும் பெற முடியவில்லை.

இஸ்ரேலும் பாலஸ்தீனுக்கு உரிய தொழில்நுட்பங்களையும் போக்குவரத்து வழித்தடங்களையும் திறந்துவிட மனம் இல்லை.

தங்களை விட மிக சிறிய நாடு தங்களையும் மிஞ்சிய வல்லரசாக வளர மனம் ஏற்கவில்லை! ஆக இந்த சிக்கலின் ஆணிவேராக இருக்கும் சிக்கல் யார் அப்பகுதியில் உள்ள இயற்கை வளத்தை கட்டுப்படுத்துவார்கள்? என்பது தான்.

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தந்த அமைதி ஒப்பந்த சரத்து என்ன தெரியுமா?

பாலஸ்தீனம் இயற்கை எரிவாயுவை இஸ்ரேலிடம் மட்டுமே சந்தை விலையை விட 15 சதவிகிதம் குறைச்சலாக விற்க வேண்டும்.

அந்த விற்பனைக்கு கிடைக்கும் அத்தனை தொகையும் அமெரிக்க டாலர் பணமாக மட்டுமே வர்த்தகமாக வேண்டும்.

அந்த பணம் அப்படியே அமெரிக்க வங்கியில் வைப்பு நிதியாக இருக்க வேண்டுமாம். பாலஸ்தீன ஆட்சியாளர்களின் உணவு, மருத்துவம், கட்டுமான தேவைகளுக்கு மட்டும் உரிய ஆவணங்களை தந்து அனுமதி பெற்று அனுமதிக்கப்படும் தொகையை எடுத்துக் கொள்ளலாம்!

இந்த ஏற்பாடு ஏன்? என்றால் பாலஸ்தீனத்தில் கிடைக்கும் வருவாயில் நவீன ராணுவ தளங்களுக்கு செலவிட்டு இஸ்ரேலை வசப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இருக்கலாம்!

இது வல்லரசுகளால் செய்யக்கூடிய நேரடிக் கட்டுப்பாட்டு சதி!

முன்பு இந்தியாவில் ஆங்கிலேயர் நடத்திய ஆட்சி முறை! பல நாடுகளில் அமெரிக்கா நடத்திய அடக்குமுறை ஆட்சிமுறை! இதைப் போலத்தான் பாலஸ்தீனத்தில் கிடைக்கும் பெட்ரோலியப் பொருள்களின் பல கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள வருவாயைச் சுரண்டும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டோ நாடுகள் நேரடி சதித்திட்ட ஆட்சிமுறை ! போர்முறை !!

இதை பாலஸ்தீனம் ஏற்க மறுத்து விட்டது. அன்று ஜனநாயக ஆட்சி நடந்து கொண்டு இருந்ததால் அந்நாட்டு மக்கள் நலனுக்கு குரல் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் உண்டு.

ஹமாஸ் அக்டோபர் 7 அன்று நடத்திய தாக்குதலை கண்டித்த நாம், இஸ்ரேலுக்கு எதிராய் பலமுறை அநீதிக்கு துணை போகாமல் எதிர்குரல் கொடுத்துள்ளோம்.

கடந்த மூன்று நாட்களாக நிலவும் போர் நிறுத்தம் வரவேற்கப்பட வேண்டியது என்று தான் கூறவேண்டும். அமெரிக்காவும் வரவேற்று இருப்பது போல் ரஷ்யா, சீனா, ஐரோப்பிய யூனியன், எகிப்து, கத்தார் முதலிய நாடுகளும் மகிழ்ச்சியுடன் இம்மாற்றத்தை வரவேற்கிறது.

ஆனால் இஸ்ரேலின் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது:– ‘‘இப்படி அமைதி காத்தால் ஹமாஸ் மீண்டும் ஆயுதங்களை பெற்று பலசாலிகளாக மாறி தாக்கக்கூடும்’’ என்பதே.

ஆக தற்போதைய அமைதி உடனடி முதல்கட்ட சிகிச்சை மட்டுமே; நோயின் தன்மை அறிந்து, தெரிந்து அதன் முழு வடிவத்தை புரிந்து கொண்டு அதைக் குணப்படுத்த மேற்கொண்டு இருக்கும் மருத்துவ சிகிச்சை கிடையாது.

உலகில் அமைதி என்றும் நிலவக் களம் இறங்க இந்தியா தயார்.

அதற்கான காலம் கனிந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா இச்சிக்கலுக்காக பிற நாடுகளையும் சர்வதேச அமைப்புகளையும் சரியான தீர்வுக்காக இணைந்து செயல்பட வைக்க செயல்பட்டாக வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *