செய்திகள்

இஸ்ரேல் – பாலஸ்தீன போருக்கு காரணம் அமெரிக்கா: ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ, அக். 11–

பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகளை, கஷ்டங்களை பார்க்காமல், இஸ்ரேல்– பாலஸ்தீனம் என இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான், இந்த போருக்கு மூல காரணம் என்று ரஷ்யா விமர்சித்துள்ளது

இஸ்ரேல் – பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பிரச்சனையில், தற்போது மற்ற நாடுகள் தலையிட்டு வருகின்றன. அமெரிக்கா ஏற்கனேவே போர் கப்பல்களை, ஆயுத தளவாடங்களை இங்கே அனுப்பி உள்ளது. இதில் தற்போது மறைமுகமாக சவுதி – ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது.

ஒரு பக்கம் சவுதி – இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்க இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை, இஸ்ரேல் தாக்கி வருகிறது. சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக அறிவித்து உள்ளது. இப்படி பல நாடுகள் இந்த விவகாரத்தில், நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு உள்ளது.

ரஷ்யா குற்றச்சாட்டு

தற்போது ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதிக்கான கொள்கைகளின் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம். அமெரிக்கா சமாதான தீர்வை ஏகபோகமாக கொண்டு வர முயன்றது. தாங்கள் வைத்ததுதான் சட்டம், நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது.

இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் இந்த போருக்கு காரணம். பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் பார்க்கவில்லை. அவர்களை கணக்கிலேயே கொள்ளாமல் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள்தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம். ஐநா இந்த விவகாரத்தில் தனிப்பட்ட பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை இஸ்ரேலும் அமெரிக்காவும் மதிக்கவில்லை. தனி பாலஸ்தீனம் மட்டுமே இந்த மோதலுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். பாலஸ்தீன மக்களின் தனிப்பட்ட கவலைகள் , பிரச்சனைகள் பற்றி அமெரிக்கா யோசிக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் விமர்சித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *