செய்திகள் நாடும் நடப்பும்

விண்வெளி துறையில் சாதிக்க தமிழகத்தை தயார்படுத்தும் ஸ்டாலின்


ஆர்.முத்துக்குமார்


தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகம் கடல் பகுதி பண்டைய காலத்தில் ஆழ்கடலில் முத்து எடுப்பதற்கு பிரசித்தி பெற்றது! சென்ற மாத இறுதியில் நாம் விண்வெளி வரலாற்றில் இடம் பெற வைக்கும் நிகழ்வாய் பிரதமர் மோடி அதே தூத்துக்குடியில் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவும் வல்லமை கொண்ட தளத்தை துவக்கி வைத்துள்ளார்.

விண்வெளியில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகள் மூன்று பிரிவுகளாக இருக்கும். ஒவ்வொரு பாகமும் குறிப்பிட்ட வேகத்தில் பறந்து செல்லும் அதே நேரத்தில் தானே தளர்ந்து பூமியில் வீழ்ந்து விடும்.

அப்படி வீழ்ந்து விடும் பாகம் பூமியின் ஈர்ப்பு சக்தியினால் அதிவேகத்தில் விழும் போது அதன் சிறு பகுதி சேதம் ஏற்படுத்தலாம் அல்லது வெடித்து சிதறும் போது தீ விபத்தாகவும் மாறிவிடலாம்.

இதை மனதில் கொண்டு தான் ஏவுதளங்கள் கடற்கரையின் அருகாமையில் அமைத்து விடுவார்கள். அப்படி எரிந்து கழன்று விழும் ராக்கெட் பாகங்கள் கடலில் வீழ்ந்து விட்டால் எந்த பாதகமும் இருக்காது.

குறிப்பிட்ட நேரத்தில் விழும் என்பதை கணக்கெடுத்து அந்த நேரத்தில் அப்பகுதிகளில் மீனவர் நடமாட்டம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

அதே வசதிகள் தூத்துக்குடியின் அருகாமை ஊரான குலசேகரப்பட்டினத்தில் ஏற்படுத்தி அங்கு நவீன ராக்கெட் ஏவு தளத்தை அமைத்துள்ளார்கள்.

முன்பு தூம்பா ஏவுதளம், பிறகு கடந்த 40 ஆண்டுகளாக மிக பிரபலமான ஸ்ரீஹரிகோட்டோ இனி அந்த வரிசையில் குலசேகரப்பட்டினம் என்பது தென் இந்தியாவின் வங்காள விரிகுடா கடற்கரை பகுதிக்கு மதிப்பூட்டலாக இருக்கிறது.

விண்வெளி துறையின் வளர்ச்சி அதிவேகத்தில் இருப்பதால் பல புதுப்புது நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை இத்துறையில் முதலீடு செய்ய துவங்கி விட்டனர்.

மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி தனியார் துறையும் இத்துறையில் நுழைந்து வருவதால் விண்வெளி துறை மிகப் பெரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வல்லமையை கொண்டு இருக்கிறது.

இன்று தமிழக விண்வெளித்துறை விஞ்ஞானிகள் பெங்களூரில் இஸ்ரோ மையத்திலும் ஸ்ரீஹரிகோட்டோ ஏவுதள மையத்திலும் பணியாற்றி வருவதை அறிவோம்.

அடுத்த சாதனைகளை நடத்த இருக்கும் குலசேகரப்பட்டினத்தில் நாடெங்கும் உள்ள இளைஞர்கள் இங்கு வந்து பணியாற்ற வர இருப்பதால் கூடங்குளம் ஏற்படுத்திய வளர்ச்சியை நினைவுபடுத்தும் மாற்றங்கள் இனி இப்பகுதியில் ஏற்பட இருக்கிறது.

அதற்கு தமிழகமும் தயாராகிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

அதன் ஒரு அம்சமாக தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்க ‘இன்– ஸ்பேஸ்’ நிறுவனத்துடன் டிட்கோ ஒப்பந்தமும் செய்தள்ளது. விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில் பூங்காக்களை அமைத்து அதன்மூலம் தொழில் முனைவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதுடன் இத்துறைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதே தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை பெருவழித்தடத்தின் நோக்கமாகும்.

தமிழகத்தில் பெருகிவரும் விண்வெளித்துறை சார்ந்த நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில்துறை மற்றும் உந்துசக்தி பூங்காவை அமைப்பதற்கு டிட்கோ திட்டமிட்டுள்ளது.

மேலும் இப்பூங்காவில் அமையவுள்ள நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு திறன்மிகு மையத்தை உருவாக்கவும் டிட்கோ திட்டமிட்டுள்ளது.

இன்-ஸ்பேஸ் (IN-SPACe) என்பது இந்தியாவில் உள்ள அரசு சாரா நிறுவனங்களின் அனைத்து விண்வெளித் துறை நடவடிக்கைகளுக்கான ஒற்றைச் சாளர முகமை நிறுவனமாகும்.

இந்நிறுவனம் ஏவுதல் வாகனம், செயற்கைக்கோள்களை உரு வாக்குதல், விண்வெளித்துறை சார்ந்த சேவைகளை வழங்குதல், விண்வெளி உள்கட்டமைப்பு வசதிகளை பகிர்தல் மற்றும் புதியவசதிகளை நிறுவுதல் போன்ற பல்வேறு விண்வெளி நடவடிக்கைகளை ஊக்குவித்தல், மேற்பார்வையிடுதல் ஆகியவற்றை செயல்படுத்தும்.

அதன்படி விண்வெளித்துறை முன்னேற்றத்துக்காக டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள திறன்மிகு மையத்துக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த பூங்காவில் அவற்றின் உற்பத்தி வசதிகளை அமைப்பதில் இன்-ஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், விண்வெளித் துறையில் புத்தொழில் விண்கலம், ராக்கெட் மற்றும் உதிரிபாகங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு, தயாரிப்பு போன்றவற்றுக்கு பெரிதும் உதவும். உலக விண்வெளி தொழில்துறையில் தமிழகம் ஒரு மிகச்சிறந்த முனையமாக உருவெடுக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் பங்கு வகிக்கும்.

ஏவுகணை விஞ்ஞானத்தில் இரு பெரிய மேதைகளை உருவாக்கிய பெருமை தமிழகத்தில் உண்டு, அவர்களில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை உலகமே அறியும். மற்றொருவர் சிவதாணுப் பிள்ளை ஆவார். அவரது கை வண்ணத்தில் உருவான பிரம்மோஸ் ஏவுகனை உலகமே இன்று வரை ஆச்சரியத்துடன் பார்க்கிறது, காரணம் இந்த ஏவுகனை ஒலியை விட அதிவேகமாக பறக்கும் வல்லமை பெற்று இருக்கிறது.

அதாவது ஏதேனும் அபாயம் நம்மை நோக்கி வரும் அறிகுறியைக் கேட்டால் அந்த தாக்கவரும் ஏவுகனையை விட பல மடங்கு அதிவேகத்தில் சென்று தாக்கி நொடிகளுக்கு முன்பே நடுவானில் தடுத்து தவிடு பொடியாக்கி நாசம் செய்து விடும்.

அந்த ஒலியை விட அதாவது Hypersonic வேகத்தில் பறக்கும் வல்லமை இனி ராக்கெட்டுகளில் கொண்டு வருவதை மேலும் வேகப்படுத்தி விரைவில் ஒளியின் வேகத்திற்கு நெருங்கிப் பயணிக்கும் திறனை பெற்றால்தான் மனிதன் பிற கிரகங்களுக்கும் பிற நட்சத்திர மண்டலங்களுக்கும் பயணிக்க முடியும்!

அந்த புரட்சிகள் தமிழகத்தில் உந்துதல் பெற ஆக்கப்பூர்வமாய் செயல்பட இன்–ஸ்பேஸ் மையத்துடன் ஏற்படுத்தி இருக்கும் கூட்டு உறுதி செய்யும் என்பதை உணர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி இருக்கும் இம்முயற்சி நாட்டின் பொருளாதாரத்திற்கும் வருங்கால வாழ்வியல் மாற்றங்களுக்கும் புதிய பாதையை அமைக்கும்!


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *