செய்திகள்

காசா கட்டுப்பாட்டுக்குள் வந்தது: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் கட்டிடங்களை குறிவைத்தே தாக்குதல்

டெல் அவிவ், அக்.11–

காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 5வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமானநிலையத்தில் இறங்கியுள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த ஆயுதங்கள் ஒருகுறிப்பிடத்தகுந்த தாக்குதல் மற்றும் கூடுதல் பலத்தினை உருவாக்க பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கையில், காசாவில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள கட்டிடங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

வீடியோ வெளியீடு

இந்நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து அதன் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: “ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் 700 என்றும், 900 என்றும் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளது. இது இறுதி எண் கிடையாது. ஏனெனில், இறந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2,700க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் நொறுங்கி விழுவது குறித்த வீடியோக்களை நீங்கள் பார்க்க முடியும். அவை பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள் அல்ல. குடியிருப்பு கட்டிடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்களுக்கான இடமாகப் பயன்படுத்துகிறார்கள். அத்தகைய கட்டிடங்களைத்தான் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழிக்கிறது’’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *