செய்திகள்

பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்பு

சென்னை, மார்ச் 23–

உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார் பொன்முடி.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமைச்சர் பொன்முடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியும், கவர்னர் ஆர்.என்.ரவியும் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டனர். அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் கைகுலுக்கி வாழ்த்தினார். பின்னர் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் அமைச்சர் பொன்முடி பூங்கொத்து வழங்கினார்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் கவர்னர் பூங்கொத்து வழங்கினார். முதலமைச்சர் வழங்கிய பூங்கொத்தை கவர்னர் சிரித்தபடி வாங்க மறுத்து, அதை அமைச்சர் பொன்முடிக்கு தரும்படி கவர்னர் கேட்டுக்கொண்டார். எனவே அந்த பூங்கொத்தை அமைச்சர் பொன்முடிக்கு முதலமைச்சர் வழங்கினார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவினால் இந்த நிகழ்ச்சி நடந்தாலும், விழா மேடையில் முதலமைச்சருடன் கவர்னர் கைகுலுக்கி நலன் விசாரித்தார்.

நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

சுப்ரீம் கோர்ட்

ஜனநாயகத்தை காப்பாற்றியது

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, மீண்டும் அமைச்சராக பொன்முடி நேற்று பதவி ஏற்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியிருப்பதாவது:-

அரசியல் சட்டத்தின் காவலரான சுப்ரீம் கோர்ட், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காக, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், ஜனநாயக சிதைவையும், கூட்டாட்சியின் மறைவையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முன் கூர்முனைகளை இடும் தவறான சாகசங்களையும், பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகள் கைவிடப்பட்டதையும் இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தல் மக்களாட்சியை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் மிக முக்கியமானது. நமது புகழ்மிகு நாட்டை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் அப்பட்டமான அதிகார அத்துமீறலை தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி உருக்கம்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்ற பொன்முடி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருணாநிதியின் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் நான். அவர் எடுத்த சட்டபூர்வ நடவடிக்கைகள் காரணமாகத்தான், நான் இந்த பொறுப்பில் மீண்டும் அமர வைக்கப்பட்டுள்ளேன். எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கட்சியின் வக்கீல்கள் வில்சன், இளங்கோ உள்ளிட்டோருக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கிடைத்துள்ள இந்த தீர்ப்பு என்பது அனைவருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும் என்றார்.

3 அமைச்சர்களுக்கு

துறைகள் ஒதுக்கீடு

கிண்டி ராஜ்பவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர்கள் பொன்முடி, ராஜகண்ணப்பன், காந்தி ஆகியோருக்கு சில மாற்றங்களுடன் அரசுத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அதன்படி, அமைச்சர் பொன்முடிக்கு உயர்கல்வி உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் ஆகிய துறைகள் ஒதுக்கப்படுகின்றன. அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் ஆகியவை ஒதுக்கப்படுகின்றன.

அமைச்சர் காந்திக்கு, கைத்தறி மற்றும் துணிநூல், பூதானம் மற்றும் கிராமதானம் ஆகிய துறைகள் ஒதுக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *