செய்திகள்

அரசுப் பள்ளிக்கு ரூ.7 1/2 கோடி சொத்தை வழங்கிய மதுரை ஆயி பூரணம் அம்மாள்

மதுரை, ஜன. 12–

அரசு பள்ளிக்கு ரூ.7 1/2 கோடி மதிப்பிலான தனது சொத்தை எழுதி வைத்துவிட்டு, வங்கியில் பணி செய்துவரும் ஆயி பூரணம் அம்மாளின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான தனது நிலத்தைக் கொடையாக வழங்கியிருக்கிறார் மதுரை புதூரில் வசிக்கும் ஆயி பூரணம் அம்மாள். தன் மகள் ஜனனியின் நினைவாக அவர் பெயரை மட்டும் பள்ளி வளாகத்துக்கு வைக்கக் கோரியுள்ளவர், விளம்பரப்படுத்தாமல் நிலத்தை அரசின் பெயரில் பதிவு செய்து ஆவணத்தை கல்வித்துறை அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு வழக்கமான தன் வங்கிப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இத்தகவல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கவனத்துக்கு வந்ததும், கனரா வங்கி அலுவலர்களிடம் தகவலைத் தெரிவித்து, நேரில் சென்று ஆயி பூரணம் அம்மாளின் கைகளைப் பற்றி வாழ்த்தி வணங்கியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் கூறும்போது, மதுரையில் இதுபோன்று நல்ல செயல்களில் ஈடுபடுகிறவர்களைத் தொடர்ந்து பார்ப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

ரூ.7 கோடி நிலம்

சில மாதங்களுக்கு முன் தத்தனேரியைச் சார்ந்த வத்தல் வணிகர் பெரியவர் ராஜேந்திரன் மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரை நேரில் சந்தித்து வணங்கி வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் தமிழறிஞர் சாலமன் பாப்பையா வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட 20 லட்சம் ரூபாய் வழங்கினார்.

இப்போது ஆயி பூரணம் அம்மாள் ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்திக் கட்டடம் கட்டுவதற்கு 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறார். இதன் சந்தை மதிப்பு ரூ.7.50 கோடி. அந்த நிலத்தை மாவட்ட பள்ளிக் கல்வி முதன்மை அலுவலரிடம் பதிவு செய்து கொடுத்துவிட்டு சத்தம் இல்லாமல் வந்து கனரா வங்கியில் தனது அன்றாட ஊழியர் பணியை செய்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்கள்தான் மனிதருள் மாணிக்கங்கள்.

இந்த உலகத்தில் பணம்தான் மிகப்பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்துச் சொல்கிறது. இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தைக் கொண்டாட வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *