செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை: குன்னூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

நீலகிரி மலை ரெயில் ரத்து

நீலகிரி, நவ. 23–

மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் 37 செ.மீ. மழை பெய்ததால், கோத்தகிரி, குன்னூர் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மலை ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் அதி கனமழை பெய்துள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி கோத்தகிரியில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 37 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி செல்லும் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்துள்ளதாலும், மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோத்தகிரி, குன்னூர் சாலைகளில் போக்குவரத்து போலீசார் பேரிகேடுகள் அமைத்து மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்யும் போது, மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்படுவதும், இதனால் நீலகிரி மலை ரெயில் சேவை நிறுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையும், மீண்டும் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரையும் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மலை ரெயில் பாதையில் சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த நிலையில், 10 நாட்களுக்குப் பின்னர் கடந்த 19ம் தேதி முதல் மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது. இதனிடையே ரெயில் வழித்தடத்தில் பாறைகள் சரிந்துள்ளதால், சீரமைப்பு பணிகளுக்காக ரெயில் சேவை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடர்லி, ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் நவம்பர் 25ம் தேதி மீண்டும் ரெயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஆங்காங்கே தரைப்பாலங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் பாய்வதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *