சிறுகதை

போதை – ராஜா செல்லமுத்து

ஐ.டி.யில் வேலை செய்யும் நலன் – புவனா இருவரும் தங்கள் பெற்றோர்களின் சம்மந்தமில்லாமலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதனால் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஒரு ‘பார்ட்டி’ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் தம்பதிகள்.

சென்னையிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுக்கிறார்கள். அந்தப் பங்களாவில் பேய் இருப்பதாக நீண்ட நாட்களாக பூட்டியிருக்கிறது. தற்போது அந்த பங்களாவைச் சுத்தம் செய்து வைத்திருக்கிறார்கள். பரந்து விரிந்த அந்த பங்களாவில் நூறு அறைகளுக்கு மேலே இருக்கிறது. குறைந்த வாடகைக்குக் கிடைத்ததால் அந்த பங்களாவில் தான் திருமண பார்ட்டி நடக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள் தம்பதிகள்.

அதன்படியே ஒரு தேதி குறிக்கப்பட்டு அன்று இரவு பார்ட்டி நடக்க ஆயத்தம் ஆகிறது. நலன் – புவனாவின் நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் என்று அத்தனை பேரும் பார்ட்டிக்கு வருகிறார்கள்.

பங்களாவில் ஆர்கெஸ்ட்ரா, ஆட்டம் பாட்டம் என்று களைகட்டுகிறது. ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசம் இல்லாமல் அத்தனை பேரும் குடிக்கிறார்கள். ஆட்டம் போடுகிறார்கள்.

திடீரென சிலருக்கு ரொம்ப போதையாகி ஆட்களை அடிப்பதும் கொடூரமாகத் தாக்குவதுமாய் இருக்கிறார்கள்.

முதலில் இதைச் சாதாரணமாக நினைத்தவர்களின் நடக்கும் விபரீதத்தை அறிந்து கொண்டு உயிரைக் கையில் பிடித்து அந்த வீட்டை விட்டுத் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் வீடு முழுவதும் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. சத்தம் போட்டு கூப்பிட முடியவில்லை. கூப்பிடும் தூரத்தில் கூட ஆட்கள் இல்லை. பயத்தில் உறைந்து போய் ஒவ்வொருவரும் அறையில் போய் கதவை சாத்திக் கொண்டு படுத்து விடுகிறார்கள்.

போதை ஏறிய மனிதர்கள் கதவை உடைத்து, இருப்பவர்களை அடித்துக் கொலை செய்யும் அளவிற்கு வந்துவிடுகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஆவி தான் இவர்களை இப்படி செய்கிறது என்று அங்கே இருக்கும் மனிதர்கள் சொல்கிறார்கள். அதில் அழைக்கப்பட்ட மனிதர்கள் சிலர் ஆவியை விரட்டுவதற்கான பூஜை செய்கிறார்கள்.

ஆனாலும் அவர்களின் அட்டூழியம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

காவல்துறை வருகிறது. பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

நடந்த பிரச்சினைக்கும் ஆவி, பேய்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பார்ட்டிக்கு வந்த ஒருவர், சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு போதைப் பொருளை மதுபானங்களில் கலந்திருக்கிறார். இதைக் குடித்த அத்தனை பேருக்கும் மதி கலங்குகிறது.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது.

ஒருவருக்கொருவர் அடிப்பதும் கிடைத்த ஆயுதங்களை எடுத்துத் தாக்குவதுமாய் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. உதவி செய்ய யாரும் இல்லை.

செல்போன் சிக்னல் கூட அங்கு கிடைக்கவில்லை. அந்த பங்களாவில் மாட்டிக்கொண்டவர்கள் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் என்று அத்தனை பேரும் பயப்படுகிறார்கள்.

ஆட்டம், பாட்டத்துடன் அமைதியாக ஆரம்பித்த பார்ட்டியில் கலவரம் உருவாகிறது.

பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் போலீசார்.

போதைப் பொருட்களைப் பறி முதல் செய்கிறார்கள். போதை ஆசாமிகளைப் பிடித்து விசாரிக்கும் போது, புதுவிதமான ஒரு போதைப் பொருள் சந்தைக்கு வந்திருப்பதால் அது எப்படி வேலைசெய்கிறது என்பதை ‘டெமோ’ செய்து பார்த்தோம் என்கிறார்கள் சிலர். அவர்களையும் போதைக் கும்பலையும் கைது செய்கிறது காவல்துறை.

நடந்த பிரச்சினைகளை அறிந்து மணமக்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள் அவர்களின் பெற்றோர்கள்.

Leave a Reply

Your email address will not be published.