சிறுகதை

சமத்துவம் – ராஜா செல்லமுத்து


சிறுகதை


ஹரிணி கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவி. அவள் படிக்கும் கல்லூரி ஒரு கலை கல்லூரி என்பதால் மாணவ-மாணவிகள் அங்கு அதிகமாக இருந்தார்கள்.

கொஞ்சம் நன்றாக படிக்கக்கூடிய மாணவி என்பதால் அவளை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அவளும் தானொரு படிப்பாளி என்பதையோ, கொஞ்சம் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதையும் அவள் வெளிக்காட்ட மாட்டாள்.

எல்லோரிடமும் சாதாரணமாக பழகுவது, சாதாரணமாக பேசுவது என்று இருப்பாள்.

ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு மாதமும் அவரவர் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் வீட்டில் ஒரு நாள் தங்கி அவர்கள் மாணவ மாணவிகளுக்கும் குடும்பத்தார்களுக்கும் ஒரு நல்ல நட்புறவை ஏற்படுத்துவார்கள்.

அதனால் மாணவ-மாணவிகள் என்பதைத் தாண்டி குடும்ப உறுப்பினர் போலவே பழகி வந்தார்கள்.

ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் வந்த காட்சியைப் போல மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு வீட்டுக்கு சென்று வருவார்கள்.

அப்படி இந்த மாதம் ஹரிணி வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது .

என்ன ஹரிணி இந்த மாதம் உங்க வீட்டுக்கு தான் நாங்க வாரம். என்ன ஸ்பெஷல்? என்று மாணவர்கள் எல்லாம் கேட்க,

உங்களுக்கு என்ன பிடிக்குமோ? அதை பண்ணித் தரேன். நீங்க வாங்க என்று சொன்னாள் ஹரிணி .

ஹரிணி வீட்டிற்கு மாணவர்கள் போவதற்கு ஒரு மாத காலம் இடைவெளி இருந்தது .

அந்த ஒரு மாத காலமும் கல்லூரிக்கு போவதும் வருவதுமாக இருந்தார்கள்

கல்லூரியில் ஒரு நாள் ஒரு சமத்துவ கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் .

அப்போது சமத்துவம் பற்றி பேசுவதற்காக ஒரு பேச்சாளர் அழைக்கப் பட்டிருந்தார். சிறப்பு விருந்தினராக ஒரு அரசியல்வாதி அழைக்கப்பட்டிருந்தார். இன்னும் சில பெரிய மனிதர்கள், தொழிலதிபர்கள், அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் எல்லாம் சமத்துவம் பற்றி நிறைய பேசினார்கள்.

சமத்துவம் என்பது ஜாதி, மதம் இனம், மொழி, நிறம் கடந்து மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் ஒன்று, அதனால் மனிதர்கள் எப்போதும் தங்களுக்குள் ஒரு சமத்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதில் ஹரிணி மற்றும் மற்ற மாணவ மாணவிகள் இதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அங்கு பேசிய எந்த சிறப்பு விருந்தினர்களும் தங்களுடைய ஜாதியை மதத்தை விட்டு யாருக்கும் அவர்கள் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளவும் இல்லை . பெண் எடுக்கும் எண்ணமும் இல்லை பெண் கொடுக்கும் எண்ணமும் இல்லை என்ற நிலையில்தான் இருந்தார்கள்.

ஆனால் அவர்கள் சமத்துவத்தைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

மற்ற மாணவர்கள் அமைதியாக இருக்கும்போது, ஹரிணி மட்டும் ஏன் சிரிக்கிறாள் ?என்று அங்கு இருப்பவர்களுக்கு விளங்காமல் இருந்தது.

அந்த மாதம் ஹரிணி வீட்டுக்கு மாணவர்கள் செல்ல வேண்டி வந்தது மொத்த மாணவர்களும் ஹரிணி வீட்டிற்கு சென்றார்கள்.

அப்பா அம்மா அண்ணன் தங்கைகள் என்று எல்லோரையும் தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ஹரிணி.

அப்போது அப்பா மலையாளம் பேசினார் . அம்மா தெலுங்கு பேசினாள். அண்ணன் மனைவி ஹிந்தி பேசினாள்.

இதைப் பார்த்த மாணவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

என்ன ஹரிணி உங்க வீட்டில எத்தனை மொழி பேசுறாங்க? என்று வந்திருந்த மாணவிகள் ஹரிணியை பார்த்து கேள்வி கேட்டார்கள்.

சிரித்துக்கொண்டே அதற்கு பதில் சொன்னாள்.

எங்க வீட்டில எல்லா ஜாதி மதங்களைச் சேர்ந்த ஆட்கள் இருக்காங்க. ஆனா நாங்க ஒரு நாள் கூட சமத்துவம் பத்தி பேசறது இல்ல.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம காலேஜ்ல நடந்த பங்சன்ல்ல அதுக்குத்தான் நீ சிரிச்சியா என்று ஒரு மாணவி கேட்க,

ஆமா என்று தலையாட்டினாள் ஹரிணி.

உண்மையிலேயே சமத்துவம் பற்றி பேசுவதற்கு தகுதியுள்ளவர்கள் யாரும் பேசுவதில்லை. அதைப்பற்றி தெரியாதவங்க தான் இல்ல ஜாதி மதங்களை தூக்கி பிடிக்கிறவங்க தான் சமத்துவம் பத்தி பேசுற நீங்க வெரி கிரேட் ஹரிணி என்று உடன் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தை வாழ்த்தினார்கள்.

அந்த மாதம் ஹரிணியின் குடும்பத்தில் விருந்தை முடித்துவிட்டு வழக்கம் போல கல்லூரிக்கு சென்றாள்.

கல்லூரி வழக்கம் போல் இயங்க தொடங்கியது .

ஆனால் அன்று ஒரு நாள் ஹரிணியின் குடும்பத்தை கல்லூரிக்கு வர சொன்னார் முதல்வர்.

அங்கே ஹரிணியின் குடும்பத்திற்கு சமத்துவ குடும்பம் என்று பட்டம் வழங்கினார்.

உண்மையிலேயே உங்க குடும்பம் தான் சமத்துவமான குடும்பம் பங்சன் ல பேசிட்டு போனவங்க எல்லாம் ஒப்புக்கு பேசிட்டு போனாங்க. இனி வர்ற தலைமுறையும் ஹரிணி குடும்பம் மாதிரி இருந்தா, இந்த உலகத்துல ஜாதி மதம் இனம் உடையும் என்று முதல்வர் பேசியது மட்டுமில்லாமல் தன் இனம் கடந்து ,மொழி கடந்து தன்மகனுக்கு பெண் எடுக்கப்போவதாக அங்கே அறிவித்தார்.

மாணவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது.

உண்மையான சமத்துவம் அந்த கல்லூரியில் மலர்ந்தது.


Leave a Reply

Your email address will not be published.