Uncategorized

8 இந்தியர்களின் மரண தண்டனை குறைப்பு: மேல்முறையீட்டு வழக்கில் கத்தார் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, டிச.29-

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கைதான 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் கோர்ட் குறைத்தது.

இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற 8 பேர், மேற்கு ஆசிய நாடான கத்தாரின் தோஹா நகரில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

அந்நிறுவனம், கத்தார் ஆயுதப்படைகளுக்கும், பாதுகாப்பு அமைப்புகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அந்த 8 பேரையும் கத்தார் உளவுப்பிரிவு கைது செய்தது. இஸ்ரேல் நாட்டுக்காக கத்தார் நீர்மூழ்கி கப்பல் திட்டம் குறித்து உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் கோர்ட் கடந்த அக்டோபர் 26-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

8 பேருக்கும் இந்தியா ஆதரவுக்கரம் நீட்டியது. அவர்களின் விடுதலைக்காக கத்தார் அரசிடம் பேசி வந்தது. மேலும், கடந்த 1-ந் தேதி, துபாயில் நடந்த பருவநிலை மாநாட்டின்போது, கத்தார் நாட்டு அமீரிடம் இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசினார். அத்துடன், கத்தார் மேல்முறையீட்டு கோர்ட்டில், 8 இந்தியர்களின் மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கில் நேற்று கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 8 இந்தியர்களின் மரண தண்டனையை குறைத்து உத்தரவிட்டது. புதிய தண்டனை விவரம் வெளியிடப்படவில்லை. இத்தீர்ப்பு, இந்தியாவுக்கு மிகப்பெரிய ராஜ்யரீதியிலான வெற்றியாக கருதப்படுகிறது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

8 இந்தியர்களின் மரண தண்டனையை கத்தார் கோர்ட் குறைத்திருப்பதாக அறிந்தோம். கத்தாருக்கான இந்திய தூதரும், இதர அதிகாரிகளும், 8 பேரின் குடும்பத்தினருடன் கோர்ட்டில் அமர்ந்து இருந்தனர். தொடக்கத்தில் இருந்தே அக்குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கிறோம்.

8 பேருக்கும் தூதரக உதவியும், சட்ட உதவியும் அளிக்கப்படும். மேலும், தொடர்ந்து கத்தார் அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்.விரிவான தீர்ப்பின் நகலுக்காக காத்திருக்கிறோம். அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய வக்கீல்களுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம். இது, உணர்வுபூர்வமான வழக்கு என்பதால், இதற்கு மேல் எதுவும் சொல்லக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *