செய்திகள்

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

பிரதமர் மோடி துவக்கினார்

புதுடெல்லி, அக். 14–

இந்தியா–இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை “நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ‘செரியபானி’ என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ வேலு பங்கேற்றார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் காணொலி காட்சியில் கலந்து கொண்டார்.

கப்பல் சேவையை தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் கூறினார்.

தொடர்ந்து மோடி பேசுகையில், இந்தியா–இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை “இரு நாடுகளுக்கு இடையேயான நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல். இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளோம். இதன் மூலம் இருநாட்டு கலாச்சாரம், தொழில் வர்த்தகம் மேம்படும்.

இரு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வணிகர்கள், யாத்ரிகர்கள் பயன் அடைவார்கள். காங்கேசன் துறைமுகத்தை இந்திய அரசு பலப்படுத்தி உள்ளது. இலங்கையில் அவசர உதவி மையங்களை அமைத்து கொடுத்துள்ளோம். ஜி 20 மாநாட்டில் சொன்ன, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்தின் படி இந்தியா செயல்பட்டு வருகிறது.

வரலாற்று, கலச்சார தொடர்பு

இந்தியாவும் இலங்கையும் கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தின் ஆழமான வரலாற்றைப் பதிவை கொண்டுள்ளவை. “நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் நீண்ட காலமாக இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு பெயர் பெற்றவை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகார் துறைமுகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சுப்ரமணிய பாரதியாரின் ‘சிந்து நதியின் மிசை’ பாடலில், பட்டினப்பாலை, மணிமேகலை முதலிய சங்க இலக்கியத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கடல்வழி போக்குவரத்து இருந்ததற்கான சான்றுகள் உள்ளது. இந்த படகு சேவை அந்த வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளை உயிர்ப்பித்திருக்கிறது.

மேலும் இது நமது நாடுகளை நெருக்கமாக்குவது, நமது மக்களை நெருக்கமாக்குவது மற்றும் நமது இதயங்களை நெருக்கமாக்குவது. வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள் உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

2015ல் நான் இலங்கைக்கு பயணம் செய்ததைத் தொடர்ந்து, டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர், இலங்கையிலிருந்து குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம். 2019ல் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நேரடி விமான சேவை தொடங்கியது. தற்போது நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மற்றொரு முக்கியமான படியாகும்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாகையில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இந்த பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ வரை பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லலாம். நாகையில் இருந்து இலங்கை செல்ல 18 சதவீத ஜிஎஸ்டி வரி சேர்த்து ஒரு நபருக்கு ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் விலை ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இலங்கையில் இருந்து நாகைக்குவர வழக்கம்போல ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணிகள் கப்பல் அன்றாடம் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்ட பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துரை துறைமுகத்துக்கு பகல் 12 மணிக்குச் சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும்.

150 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர்.

துறைமுகத்துக்குள் வரும் நபர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே 2 முறை கப்பல் போக்குவரத்து சேவைக்கான தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *