சிறுகதை

வெள்ளம் வருமுன்னே – எம்.பாலகிருஷ்ணன்

“ஏங்க நம்ம மகன் சுரேஷ் போக்கே சரியில்லைங்க. பள்ளிக்கூடத்துக்கே ஓழுங்காப் போகமாட்டேங்கிறான் இப்படியே போனா அவன் படிப்பு என்ன ஆகும்? தன் மகனைப் பற்றி கணவரிடம் வேதனையுடன் சொன்னாள் மனைவி பாக்கியம்.

“ஆமாம் பாக்கியம் நானும் அவனிடம் பல தடவை அன்பா சொல்லி பாத்துட்டேன். அதட்டியும் சொல்லி பாத்துட்டேன் கேட்க மாட்டேங்கிறான். கண்ட பையன்களோட சேராதடா படிப்பு கெட்டுப் போயிடும்னு எவ்வளவோ சொன்னாலும் காதுல வாங்க மாட்டேங்கிறான் என்று கணவன் முருகனும் புலம்பினார்.

“அவன் நினைச்சா ஸ்கூலுக்கு போறான். இல்லைனா ஏதாவது சாக்குபோக்கு சொல்றான்; வெளியே போனா நைட்ல வர்றான் ; எங்கடா ஸ்கூலுக்கு போகாம சுத்திட்டு வரேன்னு கேட்டா சரியான பதில் சொல்ல மாட்டேங்கிறான். நீங்க அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்ததினால் தான் இப்படிச் செய்கிறான்.

மனைவி சொல்லவும் கணவன் முருகனுக்கு கோபம் வந்தது.

ஆமாம்டி நான்தான் அவனை பள்ளிக்கூடத்துக்கு போகாதே, ஊர் சுத்திட்டு வாடான்னு அனுப்புறேன் என்று காட்டமாக பேசினார்.

அதுக்கு இல்லைங்க. அவன் இப்ப சேராத பையன்களுடன் சேர்ந்துட்டு ரொம்ப கெட்டுப் போயிட்டான். மகனை வாயில சொல்லாம நாலு அடி முதுகுல கொடுத்திருந்தால் அவனுக்கு பயம் வருமில்ல.

“அந்த வேலையை நீ செய்யலாம்ல. நான்தான் செய்யணுமா என்று கணவர் முருகன் கேட்டார்.

“எப்படிங்க அவன அடிக்க எனக்கு மனசு வரும். நமக்கு ஒரே மகன் அவனை அடிக்கிறதுக்கு கை வரமாட்டேங்குதே.

“அதே மாதிரி தான் நானும். ஒரே பிள்ளை ஆச்சே. அடிக்காம வாயிலேயே சொல்லிட்டு வரேன். புரியுதா? என்று கணவர் முருகன் சத்தம் போட்டு பேசத் தொடங்கினார்.

இப்படி தினமும் அடிக்கடி மகன் சுரேஷ் பற்றி கணவனும் மனைவியும் புலம்பி வாக்குவாதம் செய்வார்கள்.

அவர்களுக்கு ஒரே மகன் சுரேஷ். அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். பத்தாம் வகுப்பு வரை ஒழுங்கா படித்துக் கொண்டிருந்தவன் பன்னிரெண்டாம் வகுப்பில் வரும்போது அவனது நடவடிக்கை மாற்றமானது. பள்ளிக்கு சரியா போகாமல் சேரக்கூடாத பையன்களோடு சேர்ந்து தவறான பழக்கங்களில் ஈடுபடத் தொடங்கினான். சிகரெட் போதைப் பழக்கம் வேறு. இப்படி பல விசயத்தில் இறங்க ஆரம்பித்து விட்டான்.

பள்ளிக்கூட வகுப்பு ஆசிரியர்கள் பலமுறை பெற்றோரிடம் சொல்லி பார்த்து விட்டனர். ஆனால் அவன் திருந்திய பாடு இல்லை. அவனை வாயால் கண்டிப்பதோடு சரி அடிக்க அவர்கள் மனது கேட்கவில்லை.

அவன் பள்ளிக்கு போவது போல் போய் திடீரென்று பாதியிலே வீட்டிற்கு வருவான்.

ஏன்டா பள்ளிக்கூடத்துக்கு போகலைன்னு கேட்டால் எனக்கு மத்தியானம் ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லி பையன்களுடன் ஊர் சுற்றக் கிளம்பி விடுவான்.

பெற்றோர் இருவருமே கூலி வேலைக்கு செல்பவர்கள். அவர்கள் வேலைக்கு சென்றதும் அவன் தன்னிச்சையாக திரிவான்.

ஒரு நாள் பெற்றோர் முருகனும் பாக்கியமும் யோசித்து ஒரு முடிவு எடுத்தனர். இருவரும் தீர்க்கமாக முடிவெடுத்து அவனை திருத்த சரியான இடம் போலீஸ் ஸ்டேஷன் தான் என்று மனதில் நினைத்தவர்கள் ஒரு மனு எழுதிக் கையில் வைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனை நோக்கி கிளம்பினர். போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே சென்றார்கள் உள்ளே கான்ஸ்டபிள் இருந்தார்.

என்ன விஷயமா வந்து இருக்கீங்க? எனக் கேட்டார்.

எங்க பையன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கோம். என்றனர்.

என்ன உங்க பையன் மேல கம்ப்ளைன்டா. எதுக்கு அவன் பள்ளிக்கூடத்துக்கு போகாம கண்ட பையன்களோடா ஊர் சுத்துறான். நாங்க எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம்; கேட்க மாட்டேங்கிறான். அதான் இன்ஸ்பெக்டர் கிட்ட மனு கொடுக்க வந்திருக்கோம் என்று பெற்றோர் சொல்லவும்

“சரி வாங்க இப்படி உட்காருங்க. இன்ஸ்பெக்டர் ஐயா உள்ளே இருக்காரு. நான் போய் தகவல் சொல்லிட்டுவரேன் என்று கான்ஸ்டபிள் அவர்களை அமர வைத்து உள்ளே இருக்கும் இன்ஸ்பெக்டரிடம் தகவல் சொன்னார்.

அவரும் சரி அவர்களை வரச்சொல்லுங்க என்று சொன்னார் கான்ஸ்டபிள் பெற்றோரை பார்த்து

உங்கள ஐயா வரச்சொல்றாரு என்றுக்கூறி அவர்களை உள்ளே அழைத்து சொன்றார்.

பெற்றோர் இன்ஸ்பெக்டர் அறை உள்ளே சென்றனர். அவர்கள் வைத்திருந்த மனுவை வாங்கிப் படித்துப் பார்த்தார். அவர்களை மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு அவன் உங்களுக்கு ஒரே மகனா எனக்கேட்டார்.

ஆமாங்கய்யா. அவன் பன்னிரெண்டாம் ஆம் வகுப்பு படிக்கிறான். பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேங்கிறான். கண்ட பையன்களோடு சேர்ந்துகொண்டு தவறான பாதைக்கு போறான். அவனோட சேர்ந்த பையன்கள் அவனை சிகரெட் தண்ணி பழக்கத்தை சொல்லிக் கொடுத்து ரவுடியாக ஆக்கப் பாக்குறாங்க. நாங்களும் மகன்கிட்ட எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம். அவன் எங்க பேச்சை கேட்க மாட்டேங் கிறான். எதிர்காலத்தில் அவன் வாழ்க்கை பாதிக்க கூடாதுன்னு வேற வழி இல்லாம உங்ககிட்ட வந்தோம் ஐயா என்று கண்ணீருடன் கூறினர்.

அவர்கள் கூறியதை கேட்ட இன்ஸ்பெக்டர் சபாஷ் என்று கைதட்டி உங்கள நான் பாராட்டுகிறேன் என்று சொல்லவும் பெற்றோர் வியப்பில் ஆழ்ந்தனர்

“மகனோட தவறான போக்கை முன்கூட்டியே கண்டிக்காமல் விட்டா பெரிய ரவுடியாகவோ இல்ல பெரிய கொலைகாரனாகவும் மாறிடுவான்.மகன்னு தெரிஞ்சும் அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தற்கு என்னோட பாராட்டுக்கள். கெட்ட பாதைக்கு போவதற்கு முன்னாடியே அவனை கண்டித்து திருத்த நீங்க எடுத்த முயற்சி ரொம்ப பெரிய விஷயம். உங்கள மாதிரியே பெத்தவங்க பிள்ளைகளை ஆரம்பத்திலேயே கண்டிக்காம விட்டதால் தான் இன்னைக்கு சிலர் பெரிய ரவுடியாகவும் பெரிய கொலைகாரனாகவும் சமூகவிரோத காரியங்கள் செய்றவங்களாகவும். அவங்க வாழ்க்கையும் அழிச்சு குடும்பத்தையும் அழிச்சுகிட்டுச் சாகுறாங்க.

கவலைப்படாதீங்க உங்க மகனைத் திருத்தி நல்லபடியா பள்ளிக்கூடத்துக்கு போய் நல்லா படிக்கிறதுக்கு நாங்க பொறுப்பு. நீங்க கவலைப்படாம போங்க என்று நம்பிக்கையாக பேசினார் இன்ஸ்பெக்டர்.

பெற்றோர்கள் நம்பிக்கையுடன் விடைபெற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *