செய்திகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

புதுடெல்லி, மே.15-–

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. 5 ஆண்டுகளுக்கு ஒருதடவை இத்தடையை நீட்டித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடையை நீட்டித்தது. 1967-ம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 3-வது பிரிவின் துணைப்பிரிவுகள் (1) மற்றும் (3) ஆகியவற்றின்கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கையை அடிப்படையாக கொண்டது. இருப்பினும், அதன் ஆதரவாளர்கள், அனுதாபிகள் மற்றும் முகவர்கள் இந்திய பிராந்தியத்திலும் உள்ளனர்.

இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் ராணுவ ரீதியாக விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தனர். அதன்பிறகும் ‘ஈழம்’ என்ற கொள்கையை விடுதலைப்பு புலிகள் கைவிடவில்லை. நிதி திரட்டியும், பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டும் ‘ஈழம்’ கொள்கைக்காக ரகசியமாக செயல்பட்டு வருகிறார்கள்.

எஞ்சியுள்ள விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களோ அல்லது உறுப்பினர்களோ சிதறிக்கிடக்கும் போராளிகளை ஒருங்கிணைத்து, இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விடுதலைப்புலிகள் ஆதரவு குழுக்கள், பொதுமக்கள் இடையே பிரிவினை மனப்பான்மையை வளர்த்து வருகின்றன. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஆதரவு தளத்தை அதிகரிக்க முயன்று வருகின்றன. இது, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும்.

அனைத்து தமிழர்களுக்கும் தனித்தாயகம் (தமிழ் ஈழம்) என்ற விடுதலைப்புலிகளின் நோக்கம், இந்தியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலானது. மேலும், இந்தியாவின் ஒரு பகுதியை துண்டாடுவதற்கு வழிவகுக்கும். ஆகவே, இது சட்டவிரோத நடவடிக்கைகள் வரம்புக்குள் வரும்.

வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலி அனுதாபிகள், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என்று தமிழர்கள் இடையே இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள். இதை தடுக்காவிட்டால், மத்திய அரசு மீதும், இந்திய அரசியல் சட்டம் மீதும் தமிழர்களுக்கு வெறுப்புணர்வு உருவாக வாய்ப்புள்ளது.

தடையையும் மீறி, விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளும், தனிநபர்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில், விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது போதைப்பொருட்கள், ஆயுதங்கள் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளே இதற்கு உதாரணம்.

நாட்டின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலான காரியங்களில் விடுதலைப்புலிகள் இன்னும் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மத்திய அரசு கருதுகிறது.

ஆகவே, விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *