சிறுகதை

வள்ளிநாயகம் – ராஜா செல்லமுத்து

தொடர் விடுமுறை காரணமாக வள்ளி நாயகத்தின் மனைவி ராஜலட்சுமியும் மகள் பிரியாவும் பேத்தி தர்சினியும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து, தன் சொந்தக் கிராமமான இலஞ்சிக்குச் சென்று காெண்டிருந்தார்கள்.

புரட்டிப் போட்ட புயலின் தடம் கொஞ்சம் மாறி, இயல்பான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருந்தார்கள், மக்கள்.பேருந்து வரும் தார்ச்சாலைப் பாதையெங்கும், வள்ளி நாயகத்தின் நினைவுகள் ராஜலட்சுமியின் ஆழ்மனதில் கிடந்து துடித்தன. மகள் பிரியா தன் தாயை ஆற்றுப்படுத்திக் கொண்டே வந்தாள்.

விரையும் பேருந்தை இசைஞானி இளையராஜாவின் பாடல் நிறைந்திருந்தாலும், ஏதோ ஒரு சொல்ல முடியாத சோகம் அவள் மனதிலும் ஒட்டிக் கொண்டுதான் வந்தது

இலஞ்சி கிராமத்தில் வந்து இறங்கிய போது, ராஜலட்சுமிக்குள் அத்தனை வருத்தம்.கண்கள் குளமாக வீட்டுக்குள் சென்றாள்.

அவள் நினைவில் தன் கணவன் வள்ளி நாயகத்தைப் பற்றிய நினைவுகள், ஒரு திரைப்படமாக விரிந்து வரைபடமாக வெளிவந்தது.

வள்ளிநாயகம் என்னும் ஆறடி மனிதனுக்குள் இப்படி ஒரு அன்பா? பாசத்திற்குக் கட்டுப்படுவது ஒரு காவல்துறை அதிகாரியா? அவர் நேசத்திற்கு மட்டுமே நெருங்கிப் வரும் அதிகாரம் உள்ள மனிதனா? அவர் உயரத்திற்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தார் வள்ளிநாயகம்.

திருநெல்வேலி காவல்நிலையத்தில் ஆய்வாளர். அவர் பேருக்கு தான் காக்கி உடை அணிந்திருந்தாரே தவிர தவறியும் அந்த அதிகாரத்தை யார் மேலும் திணித்ததில்லை. இடுப்பில் துப்பாக்கி இருக்கும் யாரையும் சுட்டதில்லை. தவறு செய்பவர்களைக் கூட தடித்த வார்த்தைகளில் திட்டாமல் அவர்களிடம் அன்பாக அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் மேன்மை மிக்கவர். கைதிகளை கனிவாேடு கவனித்துக் கொள்ளும் கண்ணியமான காவலர்.

பணி செய்வது காவல் நிலையமாக இருந்தாலும் அவர் இருந்தால் அது ஒரு கோயிலாக இருக்கும்.

யாரையும் அதிகார துஷ்பிரயாேகம் செய்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதில்லை. தன் பதவியைப் பயன்படுத்தி எதையும் அபகரித்துக் கொண்டதுமில்லை .

அன்பின் உருவான காவலர். வள்ளிநாயகம் என்ற பெயருக்கு தகுந்தாற் போல தன் துணைவியின் நாயகனாக இருந்தார் .

முத்தான ஒரு பெண் பிள்ளையைப் பெற்று, பிரியா என்று பெயர் வைத்து ஊர் போற்ற வளர்த்தார். தன் பெண் பிள்ளை எப்படி வளர வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பாரோ அதேபோல் தான் திருநெல்வேலி நகரத்தில் உள்ள அத்தனை பெண்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார். அனாவசியமாக பெண்கள் யாருடனும் பேசக்கூடாது. தனிமையில் சொல்லக்கூடாது. அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகக் கூடாது என்று பெண்களுக்கு அன்புக் கட்டளையிடுவார். அது பார்ப்பதற்கு அடக்கு முறையாகத் தெரியும். ஆனால் அவர் ஒரு காவலர் என்பதால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருப்பவர் என்பதால் தான், அதைக் கூட தன் பிள்ளையிடம் ஆரம்பித்து மற்ற பெண் பிள்ளைகளையும் அதே போல் கண்காணித்து வந்தார்.

அவர் தெருவில் நடந்து வருகிறார் என்றால் தவறு செய்தவன் கூட அவரின் அன்பான அணுகுமுறையால் அதை விட்டுவிட்டு நல்ல வழி சென்று விடுவார்கள்.

காவலர் என்றால் மக்களுக்கு ஒரு விதமான வெறுப்பு இருக்கும். .ஆனால் வள்ளிநாயகம் என்றால் அனைவரும் கையெடுத்து வணங்கக் கூடிய அளவில் தான் அவர் பணி செய்து கொண்டிருந்தார்.அனைவருடனும் நட்பாக பழகக்கூடிய நல்ல காவலர்.

பதவி உயர்வு, அதிக சம்பளம் என்று எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் கூட அதையெல்லாம் தட்டிக் கழித்து தான் பிறந்த மண்ணில் தன் குடும்பத்தோடும் தன் உறவுகளோடும். தான் பழகிய அன்பான மக்களோடும் தான் பணி செய்ய வேண்டும் என்று எந்த இட மாறுதலையும் அவர் ஏற்றுக் கொண்டதே இல்லை .

அந்தக் காக்கிச்சட்டைக்குள் கனிவான குரல் இருந்தது.

“ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே…. இளையநிலா பொழிகிறதே” என்று அத்தனைத் திரைப் பாடல்களையும் அச்சரம் சுத்தமாகப் பாடும் ஆற்றல் இருந்தது. அவர் லத்தி பிடிக்கும் கையில் கவிதை வந்தது. அவர் தொப்பிக்குள் அதிகாரத்தை மூடி வைத்திருந்தார் . கவிதையும் பாடலும் ஒரு காவலர்க்கு இருக்கிறது என்றால் அது வள்ளிநாயகத்திற்கு மட்டும் தான் இருக்கிறது என்று உடன் வேலை பார்ப்பவர்களும் மக்களும் பேசிக் கொள்வார்கள்.

வள்ளிநாயகம், டிரான்ஸ்பர் வருது. புரமோஷன் வருது. இதெல்லாம் வாங்கிட்டு கொஞ்சம் சொத்து பத்து சேத்துட்டு, நல்லா இருக்கலாமே ? நீங்க கையூட்டும் வாங்குறதில்ல. அதிகாரத்தையும் பயன்படுத்துறது இல்ல. போலீசுன்னா அப்படி இப்படின்னு இருக்கணும். அப்படிங்கிற வரைமுறை இருக்கு. நீங்க எதுவுமே செய்றதில்ல. ஒரு தமிழ் வாத்தியார் மாதிரி தான் இருக்கிறீங்களேயாெழிய ஒரு போலீஸ்காரர் மாதிரி இல்லையே? என்று எத்தனையோ பேர் அவரிடம் கடிந்து கொண்டிருக்கிறார்கள்.

அதையெல்லாம் சிரித்துக்கொண்டே தட்டிக் கழிப்பார் வள்ளிநாயகம்.

ஏன் போலீசுன்னா இப்படித்தான் இருக்கணுமா? மிடுக்கான நடையில அதிகாரத் திமிர்ல அத்தனை பேரையும் அடக்கி வச்சிக்கிட்டு, நம்மள பாத்தாலே பயப்படணும். அப்படிங்கிற தொனியில தான் நடந்துக்கிறணுமா? அப்படி இல்லங்க. போலீசுன்னா மக்களை பாதுகாக்கிறதுக்கும் காவல் துறை உங்கள் நண்பன் அப்படிங்கிற வார்த்தைக்கும் தகுந்த மாதிரி நம்ம நடந்துக்கணும். அதைத்தான் நான் ஃபாலோ பண்றேன். எனக்கு பணம், பதவியை விட மனுஷங்க தான் முக்கியம் . மனிதம் முக்கியம் என்று அவரைப் பற்றி கேட்பவரிடம் பதில் சொல்வார் வள்ளிநாயகம்.

பெரிய மனுஷன்யா வள்ளி நாயகம் .இவர் கூட வேலைக்கு சேர்ந்தவங்க எல்லாம் காரு, பங்களா, வீடுன்னு பணம் எவ்வளவாே சம்பாரிச்சு செட்டில் ஆயி சிக்கல்களில் மாட்டிகிட்டாங்க.

ஆனா இவரு மட்டும் தான் அரசாங்க சம்பளத்த மட்டுமே வாங்கிட்டு நேர்மையா வாழ்ந்து நிம்மதியா இருக்காரு என்று பெருமைப்பட்டு சொல்வார்கள்.

நேர்மையின் விலை குறைவாக இருந்தாலும் அதனுடைய வலிமை பெரியது என்று நினைப்பார் வள்ளிநாயகம்.

அதனால் யாரிடமும் கையூட்டோ ? தவறான வழிகளிலே அவர் பணம் சம்பாதிக்கவில்லை.

நிறைய மனிதர்களைச் சம்பாதிக்கிறார் .

திருநெல்வேலி தெருக்களில் சென்றால் அவரை ஒரு காவலராக பார்க்காமல் நண்பனாக காவல் அரணாகப் பார்த்தார்கள் மக்கள்.

அன்பின் உருவான அந்த மனிதன் தன் செல்ல மகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்து, தன் முத்துப் பேத்தியையும் பார்த்து, தன் துணைவி ராஜலட்சுமியுடன் மீத வாழ்க்கையைக் கழித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டுதான் இருந்தார்.

ஒரு கொடுமையான கொடிய நாள். ஈவு இரக்கமற்ற மரணம் ஒரு நாள் அவரைக் கொண்டு சென்றது.

இப்படி ஒரு காவலரை இதுவரை கண்டதில்லை என்று திருநெல்வேலி மக்கள் எல்லாம் வருத்தப்பட்டார்கள்

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யா விட்டாலும் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர் துளிகள் கன்னங்களில் உருண்டோடின.

வள்ளிநாயகம் வகித்த பதவிக்கும் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை.

காலக்கரையான்கள் அவர் உடலை வேண்டுமானால் அரித்திருக்கலாம். அவர் நினைவுகளையும் நேர்மையையும் அவரின் குரலையும் அவர் கவிதைகளையும் இன்னும் சுமந்து கொண்டுதான் ஓடிக் காெண்டிருக்கிறார்கள் தாமிரபரணி தென்றலில் வாழும் மக்கள்.

நினைவிலிருந்த எண்ணமெல்லாம் இறக்கி வைத்த சிந்தனையில் எங்கோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் ராஜலட்சுமி.

தன் தாயின் தோளில் கை வைத்தாள் பிரியா. பிரியாவின் தோளில் கை வைத்தாள் தர்சினி.

மூன்று பேரும் ஒரே திசையில் திரும்பினார்கள்.

தூரப் பார்க்கும் திசையில், ஆறடி உயரம் காெண்ட கம்பீரமான உயரம் கொண்ட வள்ளிநாயகம் காக்கி உடை அணிந்திருந்தாலும் காற்றோடு தன் கவிதைகளையும் பாடலையும் பாடிக்கொண்டு வருவதாக மூவர் நினைவிலும் வந்து வந்து போனார்.

அவரைப் பற்றிய நினைவுகள் மூவர் நெஞ்சிலும் நிறைந்திருந்தது.

அம்மா …அப்பா நம்மள விட்டுட்டு எங்கேயும் போகலம்மா. நம்ம கூட தான் இருக்கார் என்று தைரியம் சொன்னாள் பிரியா.

இலஞ்சிக் கிராமத் தெருக்கள் வள்ளி நாயகத்தின் பாடல்களையும் கவிதையும் சுமந்து கொண்டு தான் இருக்கிறதென்று நினைத்தார்கள்.

காக்கி உடையணிந்த ஒரு காவலருக்குள் இவ்வளவு கவித்துவத்தை மனிதநேயத்தை எந்தக் காவலரிடமும் கண்டதில்லை என்று இலஞ்சி கிராம மக்களும் சொன்னார்கள்.

காக்கி உடை அணிந்து கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தார் வள்ளிநாயகம்.

“மேகம் கருக்குது. மழை வர பாக்குது.வீசி அடிக்குது காத்து. மழை காத்து”

என்று பாடியபடியே வள்ளிநாயகம் மேகாத்து வழியாக வருவதாக நினைத்தார்கள் உறவுகளும் மக்களும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *