செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புயல் 4–ந்தேதி தமிழகம் – ஆந்திரா இடையே கரையைக் கடக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சென்னை, டிச. 1-

வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று 3-ல் புயலாக உருவாகி டிசம்பர் 4ம் தேதி மாலை சென்னை – ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் மேற்கு–வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தொடா்ந்து புயல் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து 3-ந்தேதி புயலாக மாறும்.

இந்த புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரைத்த மிக்ஜாம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் 4ம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை – மசூலிப்பட்டினம் இடையே 4ம் தேதி கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 900 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 800 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும். எனவே தமிழகத்திற்கு நாளை முதல் 5–ந்தேதி வரை ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாக கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்களில்

1–ம் எண் புயல் கூண்டு

இந்த நிலையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளதை குறிக்கும் 1ம் எண் புயல்

எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் சூறைக்காற்று வீசுவதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *