செய்திகள்

பைக்கில் பட்டாசு வெடித்து சாகசம்: கைது செய்யப்பட்ட 5 பேரின் லைசென்ஸை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை

திருச்சி, நவ. 14–

திருச்சியில் பைக்கில் பட்டாசு வெடித்து சாகசம் செய்ததால் கைதான 5 பேரின் லைசென்ஸ்களை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு, இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக கீழே இருந்து மேலே சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசை பைக்கின் முன்புறம் பொருத்தி அதனை கொளுத்தி வெடிக்க செய்து கொண்டு பைக்கை நெடுஞ்சாலையில் ஓட்டியதும், வீலிங் செய்வது போன்ற ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. டெவில் ரைடர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ வைரல் ஆகியது.முதலில் இது எங்கு எடுத்தது என்று தெரியாமல் இருந்த நிலையில், திருச்சி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து திருச்சி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூர் சேர்ந்த மணிகண்டன் என்பதும், இந்த சாகசத்தை வீடியோவாக எடுத்து வலைதளங்களில் வெளியிட்டது திருச்சி வயலூர் ரோடு குமரன் நகர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய்(வயது 24) என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில் பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த அஜய் கைது செய்யப்பட்டார். மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சியில் பட்டாசுகளை வைத்து வீலிங் செய்யும் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டதை தொடர்ந்து கோட்டை போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட சாலையில் வீலிங்கில் ஈடுபட்ட சிந்தாமணி டைமண்ட் பஜார் பகுதியை சேர்ந்த உசேன் பாஷா(வயது 24), காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பால்பண்ணை முதல் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள சாலையில் வீலிங் செய்த தாரநல்லூர் ராஜேஷ் (24), ஜீயபுரம் பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பர்ஷத் அலி (24), லால்குடி சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட காணகிளியநல்லூர் அஜித் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேரின் லைசென்சை ரத்து செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *