செய்திகள்

பாரதீய ஜனதா வேட்பாளர் தொடர்புடைய நிதி நிறுவனத்தில் ரூ.300–500 கோடி மோசடி

பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்

சென்னை, ஏப்.10-

பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் தேவநாதன் யாதவ் தொடர்புடைய மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில், 300 முதல் 500 கோடி ரூபாய் வரையில் மோசடி நடந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன், மூத்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம், எஸ்.கே நவாஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக உள்ள தேவநாதன் யாதவ் தொடர்புடைய மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில், 300 முதல் 500 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி மோசடி நடந்துள்ளது என்று, வைப்பு நிதி செலுத்தியுள்ள மூத்த குடிமக்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். எங்கள் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை 2 நாட்கள் முன்னரே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். நாங்கள் அது தொடர்புடைய ஆவணங்களை திரட்டி வந்தோம். இப்பொழுது நிதி நிறுவன வாடிக்கையாளர் ஒருவரின் ஆடியோ பதிவை வெளியிடுகிறோம்.

மைலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் 4 மாதங்களுக்கு மேலாக மூத்த குடிமக்கள் செலுத்திய வைப்பு நிதிக்கு வட்டி வழங்கவில்லை. முதிர்வடைந்த தொகையும் கூட வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படாமல், மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. நிதி நிறுவனம் கொடுத்த பல காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வாடிக்கையாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அப்படியான ஒரு வேட்பாளரை பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கு நிறுத்தியுள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த 4 மாதங்களாக மூத்த குடிமக்கள் செலுத்தியுள்ள வைப்பு நிதிக்கு வட்டியோ அல்லது முதிர்வு தொகையோ அளிக்கப்படாத நிலையில், வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினால் அல்லது போலீசில் புகார் அளிப்பதாக தெரிவித்தால், உங்கள் நிதி திரும்ப கிடைக்காது என்று மிரட்டப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது.

தேவநாதன் யாதவ் தனது நாடாளுமன்ற வேட்பாளர் உறுதிமொழி பத்திரத்தில் 300 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார். எனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவருடைய வங்கிக் கணக்கை முடக்க வேண்டும்.

பொருளாதாரக் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க உள்ளோம். எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை கவனித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் எங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் குழுவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆணையிட்டுள்ளார். அதன்படி போதுமான நடவடிக்கை இல்லை என்றால் வழக்கு தொடரவும் ஆயத்தமாக உள்ளோம்.

மைலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில், 500 கோடி ரூபாய் வரையில், பொதுமக்களின் பணம் நிதி கையாடல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் தேவநாதனை, தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலையும் காப்பாற்றி வருகிறார்கள். இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. நையினார் நாகேந்திரன் மேலாளரிடம் ரூ.4 கோடி நிதி கைப்பற்றப்பட்ட நிலையில், அவர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. மற்றொரு பாஜக வேட்பாளர் தொடர்புடைய நிதி நிறுவனத்தில் நடந்துள்ள மோசடி குறித்தும் போதுமான நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர். பேட்டியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *