செய்திகள் நாடும் நடப்பும்

பசுமைப் பொங்கலைக் கொண்டாடுவோம்!


ஆர். முத்துக்குமார்


இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை, தமிழ்நாடு எங்கும் விழாக் கோலமாக கொண்டாட்டங்கள் துவங்கி விட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைப்படி பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 பணமும் எல்லா குடும்பத்தாருக்கும் உரிய நேரத்தில் சென்றடைந்து கொண்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட தமிழரின் வீர விளையாட்டான காளையை அடக்கும் ஜல்லிக்கட்டும் பரபரப்பாக அரங்கேற ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் அண்மைக் காலமாக மின்சாரப் பற்றாகுறை காரணமாக ஏற்படும் மின்தடைகளை நாம் பார்க்கவே இல்லை. தற்போது மின்மிகை மாநிலமாக நாம் மாற துவங்கி விட்டோம். மேலும் வடசென்னையிலுள்ள அத்திப்பட்டில் ரூ.6500 கோடியில் கட்டப்பட்டு வரும் 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையம், ஓரிரு மாதங்களில் துவங்கப்பட இருக்கிறது. எனவே, கோடை காலத்தில் அதிகரிக்கும் மின்தேவையை இது சரி செய்துவிடும் என்று நம்பலாம்.

மின் உற்பத்தி

அனல்மின் நிலையம் நீர் மின் நிலையம் அணுமின் நிலைய மின்சாரம் என பல வகையிலும் நமக்கு மின்சாரம் கிடைத்து வருகிறது. காற்றாலை, சோலார் மின்சார உற்பத்தியில் நாம் ஈடபட்டு இருந்தாலும் காற்றாலை மின்சாரத்தையும் சூரிய ஒளி மின்சாரத்தையும் இன்னும் கூடுதலாக உற்பத்தி செய்ய வழிவகைகளை காண வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். சென்ற மாதத்தில் தமிழ்நாட்டில் பெய்த வரலாறு காணாத மழையின் அளவை கண்டு பல்வேறு மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

இவை எல்லாம் புவி வெப்பமயமாதலின் விளைவு என்று, சூழலியலாளர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால், உலகின் வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள் கூட எல் நினோ, லா நினோ பாதிப்புகளுக்கு தப்பவில்லை என்றே சொல்ல வேண்டும். இவை எல்லாம் காலநிலை மாறுதல்களின் விளைவாகவே ஏற்படுகிறது.

எல் நினோ, லா நினோ என்பது பசிபிக் கடலில் இயற்கையாக ஏற்படக் கூடிய கால நிலை மாற்றம். இது உலகளாவிய வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பசிபிக் பெருங் கடலில் சராசரி வெப்ப நிலை அளவு குறிப்பிட்ட காலத்திற்குள் 0.8 சதவீதம் அதிகரிக்கும் போது எல் நினோ உருவாகிறது. எல் நினோ காலங்களில் இதுபோன்ற பேய் மழை பெய்வது அண்மை காலமாக வாடிக்கையாகி விட்டது. அதே சமயம் லா நினாே என்பது இதே பிராந்தியத்தில் அசாதாரணமாக கடலின் குறைந்த வெப்பநிலையைக் குறிக்கிறது. அந்த சமயத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் வறட்சி ஏற்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இதனைத் தடுக்கும் முயற்சியில் நமது பங்கும் இருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது பொதுமக்களாகிய நமது கடமையும் என்பதை மறந்து விடக்கூடாது. தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடித்ததன் பயனாக, காற்று மாசு உயர்ந்ததையும் கண்டோம். அதேபோல், போகியின் போது நமது பழைய துணி மணிகள் மற்றும் பழைய பொருட்களை எரித்து புகை மாசு அதிகரிக்காமல் இருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கும் இருக்கிறதுதானே.

அதுமட்டுமின்றி, 2024–ம் ஆண்டு ஜனவரி துவங்கிய இந்நாளிலும் ஒன்றை மறந்துவிடக்கூடாது, கொரோனா கிருமி நம்மிடமிருந்து முழுவதுமாக மறையவில்லை, அது புதுப்புது திரிபுகளாக நம்மிடம் இன்னும் தவழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே இம்முறையும் பொங்கல் கொண்டாட்ட கோலாகலத்தில் மூழ்கி மகிழும் நாம், சற்றே விழிப்புடன் ஆரோக்கியமாகக் கொண்டாடுவோம்.

கூட்டம் மிகுந்த பகுதிகளில் குறிப்பாக திரையரங்குகளில் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டை ரசிக்கும் ரசிகர்கள் முகக்கவசத்தை போடுவது தப்பு இல்லை. முகக்கவசம் அணிந்து வாழ்வது நாம் பயந்து வாழும் கோழைகள் என்று பொருள் இல்லை. முகக்கவசம் ஒரு நல்வாழ்வுக்கான கேடயமாகும். அதை அணிபவர் ராணுவ மிடுக்கோடு வலம் வருபவர். அவரது உடல் நலத்துடன் அருகாமையில் இருப்போர் நலத்தின் மீதும் அக்கறை கொண்டவர் என்ற நற்செயல் அல்லவா அது.

எனவே புகை மாசு அதிகரிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வோம் .

முகக்கவசம் அணிந்து சென்று நம் நலனையும் உலக மக்கள் நலனையும் காப்போம்.

தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இனிமை பொங்க

பசுமைப் பொங்கலைக் கொண்டாடுவோம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *