செய்திகள்

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் புகை குண்டு வீச்சு

4 பேர் கைது

2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று அது முறியடிக்கப்பட்ட 22வது வருட நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென 2 பேர் கூச்சலிட்டு கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ளே குதித்தனர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டுகள் இருந்தது. சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்.இதனால் அவையில் இருந்த உறுப்பினரகள் அச்சத்துடன் ஓடினர்.

கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.

அத்துமீறிய அந்த இருவரும் சில உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவரும், திடீரென மக்களவையில் குதித்து சர்வாதிகாரம் கூடாது என்று கோஷம் எழுப்பியதாகவும், வண்ணத்தை உமிழும் சிறு கருவியை அவர்கள் கையில் வைத்திருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் அளித்தப் பேட்டியில், “அரங்கில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். ஒருவர் உறுப்பினர்கள் இருக்கையில் குதித்தார். இன்னொருவர் சபாநாயகர் நோக்கி ஓடினார். இருவர் கைகளிலும் வண்ணப் புகை உமிழும் கருவி இருந்தது. அது விஷப் புகையாக இருக்கலாம், கண்ணீர் புகையாக இருக்கலாம், ஏன் புகை வெடிகுண்டாகவும் இருக்கலாம். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது” என்றார்.

ஆதிரஞ்சன் சவுத்ரி எம்.பி. கூறுகையில், “பாராளுமன்ற சபை வளாகத்துக்குள் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. இதனால் எம்.பி.க்களே மர்ம மனிதர்கள் இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் சபை காவலர்களை வரவழைத்து அவர்களிடம் 2 பேரையும் ஒப்படைத்தனர்” என்றார்.

நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே புகை குண்டுகளை வீசியதாக ஒரு பெண், ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர். கலர் புகை குண்டுகளை வீசி கோஷமிட்டவர்களை போலீசார் பிடித்தனர்.

நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் புகை குண்டுகளை வீசியதாக கைது செய்யப்பட்ட 4 பேரும் நாடாளுமன்ற காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுமார் 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும் துவங்கியது. அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் புகை குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

முன்னதாக, நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 21-வது ஆண்டு நினைவு நாளான இன்று (புதன்கிழமை) அந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்.பி.கள் அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *