செய்திகள்

தினமும் சம்மன் அனுப்புவதை நிறுத்திவிட்டு நீதிமன்ற முடிவுக்காக காத்திருக்க வேண்டும்

அமலாக்கத் துறையின் 7-வது சம்மனுக்கு கேஜ்ரிவால் பதில்

டெல்லி, பிப். 26–

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய 7-வது சம்மனையும் நிராகரித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் சட்ட நடைமுறைகளுக்கு அமலாக்கத் துறை மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு நடைமுறைப்படுத்தியது. இதில் ஊழல் நடந்ததாகவும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் பாரதீய ஜனதா புகார் கூறியது. இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காத்திருக்க வேண்டும்

இந்த வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் ஏற்கெனவே 6 முறை சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த சம்மன் சட்டவிரோதமானது எனக் கூறி வரும் கேஜ்ரிவால் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

வழக்கு தொடர்பாக கடந்த 17-ம் தேதி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. அன்றைய தினம் காணொலி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவர் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக கூறுப்படும் வழக்கில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை சார்பில் 7 வது முறையாக அனுப்பப்பட்டது. இந்த சம்மனுக்கு பதிலளித்து ஆம் ஆத்மி கட்சி கூறி இருப்பதாவது:–

“இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 16 ந்தேதி நடக்க இருக்கிறது. எனவே அமலாக்கத் துறை தினமும் சம்மன் அனுப்புவதை நிறுத்துவிட்டு பொறுமையாக நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *