செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்; பா.ஜ.க.– காங்கிரஸ் இடையே கடும் போட்டி

கருத்துக்கணிப்பு பொய்யானது

பா.ஜ.க. கூட்டணி – 300; இந்தியா கூட்டணி – 225 முன்னிலை

* மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்கரி முன்னிலை

* நடிகை கங்கனா ரனாவத் முன்னிலை

* மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவு

* வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் ராகுல் முன்னிலை

பா.ஜ.க. கூட்டணி – 300; இந்தியா கூட்டணி – 225 முன்னிலை

புதுடெல்லி, ஜூன் 4–

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதியம் 1 மணி நிலவரப்படி பா.ஜ.க. 300 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 225 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 18 தொகுதிகளில் பிற கட்சிகள் முன்னிலையில் உள்ளன.

7–ம் கட்ட தேர்தல் 1–ந் தேதி முடிவடைந்த நிலையில் அன்று நடந்த கருத்துக் கணிப்பில் பா.ஜ.க.வுக்கு 300 முதல் 400 வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கருத்துக் கணிப்பை பொய்யாக்கும் வகையில் இன்றைய தேர்தல் முடிவு இருந்தது. அதாவது பா.ஜ.க. கூட்டணி 300 தொகுதிகளில் தான் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 225 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பின்னர் தான் நிலைமை சரியாக தெரிய வரும்.

உத்தரபிரதேசம் வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை வகிக்கிறார். குஜராத் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ் நாத் சிங், நிதின் கட்கரி, நடிகை கங்கனா ரனாவத் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவை சந்தித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் முழுமையாக கை கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த பா.ஜ.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 295 இடங்களிலும், இந்தியா கூட்டணி 230 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிக்ள் 18 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பா.ஜ.க. முன்னணியில் இருந்தது. இதுவே இந்தியா கூட்டணிக்கு ஆரம்பகட்ட சறுக்கலாக அமைந்துள்ளது.

வாரணாசியில் பிரதமர் முன்னிலை

உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான பிரதமர் நரேந்திர மோடி 1,19,485 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 84,847 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 1,20,986 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

இதேபோல கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 2,08,904 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். சிபிஐ வேட்பாளரான ஆனி ராஜா 88,698 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.

அமித்ஷா முன்னிலை

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2,99,289 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான ஸ்மிருதி இரானி 61,854 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.ஷர்மா 86,366 வாக்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் முன்னிலை

லக்னோ தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான ராஜ்நாத் சிங் 99,456 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான நிதின் கட்கரி 1,15,944 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான மஹுவா மொய்த்ரா 66,565 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் அம்ரிதா ராய் 59,290 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கங்கனா ரனாவத் முன்னிலை

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரான நடிகை கங்கனா ரனாவத் 2,43,171 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் மெகபூபா முப்தி 95,217 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மியான் அல்தாப் அஹ்மத் 2,13,376 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான சசி தரூர் 82,721 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் 87,022 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

சுல்தான்பூரில் பாஜக வேட்பாளர் மேனகா காந்தி பின்னடவை சந்தித்துள்ளார்.

ர் நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை

திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி முன்னிலையில் உள்ளார். சுரேஷ் கோபி 2,06,378 வாக்குகளுடன் முன்னிலை உள்ளார். இவருக்கு அடுத்ததாக கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமார் 1,68,612 வாக்குகள் பெற்றுள்ளார்.

543 நாடாளுமன்ற தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

443 தொகுதிகளில்

பா.ஜ.க. தனித்து போட்டி

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகளில் மட்டும் என்டிஏ போட்டியிடவில்லை. 441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. சூரத் தொகுதியில் அக்கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதால், அதன் கூட்டணி கட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.

––––––––

கருத்துக்கணிப்பு பொய்யானது:

பா.ஜ.க.– காங்கிரஸ் இடையே கடும் போட்டி

–––––––––

கடந்த ஜூன் 1–ந்தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் பொய்யாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி உருவாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலின் கடைசி கட்டமான 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1–ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அன்று மாலையே பல தனியார் நிறுவனங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. இவை அனைத்திலும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு 300 முதல் 400 தொகுதிகள் கிடைக்கும் எனக் கணித்திருந்தன. தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராவது உறுதி எனவும் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், இன்று காலை முதல் வெளியாகி வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள், தேர்தலுக்கு பிந்தையக் கணிப்புகளை பொய்யாக்கி வருகின்றன.

முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் ஆளும், எதிர்கட்சி கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

என்டிஏ 291 முன்னணியில் இருந்தாலும், சில தொகுதிகளில் மிகக்குறைவாக ஓரிரு ஆயிரம் வாக்குகளில் முன்னணி வகிக்கின்றன. இதன்மூலம், 2 கூட்டணிகளுக்கு இடையில் தேசிய அளவில் சரிநிகர் போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு அயோத்தியில் அமைந்த ராமர் கோயில் பெரும் பலமாகப் பார்க்கப்பட்டது. எனினும் அதன் பலன் பாஜகவிற்கு கிடைக்குமா? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

பிகாரிலும் இந்தியா கூட்டணி, பா.ஜ.க. சரிநிகரான போட்டியில் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் பா.ஜ.க.வுக்கு ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறது. இம்மாநிலங்களில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகமாக உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

நாட்டில் 18-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் கடந்த 1ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64.20 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

அருணாசல பிரதேசத்தை மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது.

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரி தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை திறக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *