செய்திகள்

தோனிக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார்? தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம்

சென்னை, மார்ச் 13–

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு யார் கேப்டன் பொறுப்பில் இருப்பார்கள் என அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

வரும் 22-ம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இத்தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக முயற்சித்தது, ஆனால் அது சரியாக நடக்கவில்லை, எனவே தோனி அந்த பாத்திரத்தை திரும்பப் பெற்றார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டே ஓய்வு பெறுவார் என எண்ணப்பட்ட மகேந்திரசிங் தோனி, இந்த ஆண்டும் விளையாடுவார் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 42 வயதான தோனிக்கு இதுவே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்காகவே ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் சற்று கவலை அடைந்தாலும், அவருக்கு பின் அணியை யார் வழிநடத்தப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘‘கேப்டன், துணை கேப்டன் நியமனம் பற்றி பேச வேண்டாம். அதை பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் விட்டுவிடுங்கள்” என்றார். எனவே ”தோனி அடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் யார் என்பதை முடிவு செய்து என்னிடம் தகவல் சொன்ன பிறகு அதை உங்களிடம் தெரிவிக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்வாட் அணியை வழிநடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *