செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 95% பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டம் பிசுபிசுத்தது

சென்னை, ஜன. 9–

போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 95% பஸ்கள் இயக்கப்படுவதாக – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு பிரச்சினை குறித்து, 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை இதுவரை 5 கட்டமாக நடைபெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றும் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதனால் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் தி.மு.க., ஐ.என்.டி.யு.சி. உட்பட சில தொழிற்சங்கங்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 93.90% பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர பஸ்கள் 95.27% இயக்கப்படுகின்றன.

விழுப்புரம் கோட்டத்தில் 84.02% பஸ்களும், சேலத்தில் 98% பஸ்களும் இயக்கப்படுகின்றன. நெல்லையில் 96.76% பஸ்களும், கோவையில் 95.17% பஸ்களும், கும்பகோணத்தில் 91.17% பஸ்களும், மதுரையில் 98.12% பஸ்களும் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் பேட்டி

அமைச்சர் சிவசங்கர் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொதுமக்கள் அரசு பஸ்களில், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. போராடுவது உங்கள் (போக்குவரத்து தொழிலாளர்கள்) உரிமை. ஆனால் மக்களுக்கு இடையூறு இன்றி போராட வேண்டும். பொங்கல் பண்டிகை நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மக்களுக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 95 சதவீதத்திற்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலை உள்ளது. நிதிநிலை சீரான பின் அகவிலைப்படி கோரிக்கையை நிறைவேற்றுவோம். அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்காக கால அவகாசம்தான் கேட்கிறோம். அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு உள்ளனர். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்லவன் சாலை பணிமனையிலும் மதுரையில் பொன்மேனி பணிமனையிலும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *