செய்திகள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

செப்டம்பர் 2024–க்குள் தேர்தல் நடத்த உத்தரவு

புதுடெல்லி, டிச. 11–

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி, மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ன்கீழ் சிறப்பு அந்தஸ்து இருந்தது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி, தேசிய பாதுகாப்பு, வெளியுறவு போன்ற சில முக்கிய விவகாரங்களைத் தவிர, மற்ற அனைத்து விவகாரங்களிலும் கொண்டுவரும் முடிவுகள், சட்டங்களை ஜம்மு காஷ்மீரில் அவ்வளவு எளிதாக மத்திய அரசால் கொண்டு வந்துவிட முடியாது. ஜம்மு காஷ்மீர் சட்டசபை அவற்றை அனுமதித்தால் மட்டுமே அவற்றை அங்கு செயல்படுத்த முடியும்.

பெரும்பாலான விஷயங்களில் மத்திய அரசின் அதிகாரத்தைவிட, மாநில அரசின் அதிகாரம்தான் முதன்மையாக இருக்கும். குறிப்பாக, ஜம்மு காஷ்மீருக்கென்று தனி கொடி, அரசியல் சாசனம், இரட்டைக் குடியுரிமை, வேறு மாநிலத்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது, உட்பட பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளை பிரிவு 370 வழங்கியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுவதுமாக ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தாது.

சிறப்பு அந்தஸ்து ரத்து

இத்தகைய சூழலில், 2019-ல் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, தேசிய பாதுகாப்பு, தீவிரவாதிகள் ஊடுருவல் போன்றவற்றைக் காரணம் காட்டி, 2019 ஆகஸ்ட் 5-ம் தேதியன்று பிரிவு 370-ஐ ரத்து செய்தது. அதோடு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, நேரடியாக மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தது.

மேலும், `யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததுகூட தற்காலிக நடவடிக்கைதான் . விரைவில் மாநிலமாக மீண்டும் மாற்றப்படும்’ என்று பா.ஜ.க அரசு கூறியது.

இவ்வாறு கூறப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், இன்றுவரை ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநிலமாக்கப்படவில்லை. சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படவில்லை. பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட சமயத்தில், `இன்றைக்கு தன் அதிகாரத்தால் ஒரு மாநிலத்தை இரண்டாக உடைத்து தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த மத்திய பா.ஜ.க அரசு, நாளை எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றி தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும்’ எனப் பல்வேறு மாநிலங்கள் எதிர்த்தன.

இதன்காரணமாக, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ஜம்மு காஷ்மீரின் மாநில கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மொத்தமாக 23 மனுக்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், பி.ஆர்.கவாய், சஞ்சிவ் கன்னா, சூர்யா காந்த் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கத் தொடங்கியது. விசாரணையில், ‘ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்க பரிந்துரைத்தது யார்? அரசியலமைப்பில் பிரிவு 370 தற்காலிகமானது என்று கூறப்படும் வேளையில், எவ்வாறு அது நிரந்தமாகும்? என மத்திய அரசுக்கும், மனுதாரர்கள் தரப்புக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

காரசார வாதம்

அதற்கு, `மாநிலங்களை மறுசீரமைக்க மத்திய அரசுக்கு அதிகாரமிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு பிரிவு 370 தடையாக இருந்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குப் பின்னால் ஜம்மு காஷ்மீரின் சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தீவிரவாத செயல்கள் குறைந்திருக்கிறது’ என மத்திய அரசு வாதிட்டது. மறுபக்கம், `பிரிவு 370-ஐ நீக்க அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை முக்கியம். ஆனால், ஜம்மு காஷ்மீரில் 1956-ல் இது கலைக்கப்பட்டுவிட்டதால், எவ்வாறு பிரிவு 370-ஐ நீக்க முடியும். மத்திய அரசின் இந்த செயல், சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கும், ஜம்மு காஷ்மீருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுகிறது. இது, மக்கள் விருப்பத்துக்கு எதிரான அரசியல் நடவடிக்கை’ என மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இறுதி வாதங்களைக் கேட்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு தீர்ப்பை ஒத்திவைப்பதாக செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.

5 நீதிபதிகள் அமர்வு

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்புகள் அளித்தாலும், பெரும்பான்மையான நீதிபதிகள் அரசின் நடவடிக்கை ஆதரவாகவும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர்.

தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பு:

மூன்று தீர்ப்புகள் இருந்தாலும், ஒரே தீர்ப்பாக தான் கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. ஜனாதிபதி ஆட்சியின்போது மாநிலங்களில் மத்திய அரசால் அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முடிவையும் கேள்வி கேட்க முடியாது.

ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு தீர்ப்பளிக்க தேவையில்லை. ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்போது மாநிலங்கள் யூனியன் பிரதேச அதிகாரத்தில் வந்துவிடும். மாநிலத்தின் செயல்பாட்டுக்காக ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்துவதை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்ற முடிவுக்கு வருகிறோம்.

அவசரச் சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது அரசியலமைப்பில் தெளிவாகிறது. சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை நீக்கியது என்பது தற்காலிக நடவடிக்கைதான். ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. இந்தியாவை உள்ளடக்கியது தான்.

செப்டம்பருக்குள் தேர்தல்

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய இயலாது; அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லும். அதன்படி, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும். அடுத்தாண்டு செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்துகிறோம். தேர்தலை நடத்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும்.

இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *