செய்திகள்

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது ஏன்?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

புயல் நிவாரணப் பணிகள்: நேரில் ஆய்வு

சென்னை, டிச.6–

முதலமைச்சர் உத்தரவின்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (5–ந் தேதி) மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

நேற்று அடையாறு முகத்துவாரத்தையும், பக்கிங்காம் முகத்துவாரத்தையும், மாநகராட்சி அலுவலர்களோடு நேரடியாக சென்று ஆய்வு செய்தோம். ஒவ்வொரு இடத்திலும் நூறு சதவீதம் மழை நீர் கடலில் உள்வாங்க வேண்டும். ஆனால் மழைநீர் 10% முதல் 20% வரை மட்டுமே உள்வாங்கிக் கொண்டிருந்தது. இதனால்தான் சென்னையின் பெருவாரியான பகுதிகளில் மழை நீர் தேக்கம் என்பது இருந்தது என்று அவர் விளக்கம் அளித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னமலை, தாடண்டர் நகர், ஐந்து விளக்கு ஆலந்தூர் சாலை, அப்பாவு நகர், ஜோதியம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் மிக் ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, ரொட்டி, பால், மருத்துவ வசதி ஆகியவை வழங்கி மேற்கண்ட நிவாரண பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

சென்னையில் வடகிழக்கு பருவமழை என்பது வேறு எந்த மழையின் அளவையும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு மிக கனமழையாக இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1–ம் தேதி முதல் 5–ம் தேதி வரை 5 செ.மீ மழை பெய்வது என்பது இயல்பு. ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1–ம் தேதி முதல் 5–ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவாகி இருக்கின்ற மழையின் அளவு 58 செ.மீ.

அதேபோல் மீனம்பாக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1–ம் தேதி முதல் 5–ம் தேதி வரை மழைப்பொழிவு என்பது 5 சென்டிமீட்டர் என்பது இயல்பு. அதனால் தற்போது பெய்திருக்கும் மழையின் அளவு 50 சென்டிமீட்டர். அது மட்டுமல்லாது சென்னையில் இதுவரை இல்லாத அளவு வடகிழக்கு பருவமழையின் அளவு 29 சதவிகிதம் கூடுதலாக பெய்திருக்கிறது.

இதுவரை வந்துள்ள புயல்களில் அதிக.அளவிலான பாதிப்பினை ஏற்படுத்திய புயலும் கூட இது. குறிப்பாக சென்னையை பொறுத்தவரை இவ்வளவு பெரிய மழை பெய்தும் கூட மழை நீரை கடல் உள்வாங்க வேண்டும். நேற்றுக்கு முன்தினம் வரை கடலின் சீற்றம் அதிகமாக இருந்த காரணத்தினால் முழுமையாக மழை நீர் உள்வாங்க சிரமம் ஏற்பட்டது.

40 ஏரிகளில் உபரிநீர்

மேலும் மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் போன்ற பகுதிகளை பொறுத்தவரை அங்கே இருக்கின்ற கார்த்திகேயாபுரம் ஏரியாக இருந்தாலும், மேடவாக்கம் ஏரியாக இருந்தாலும், சித்தாலப்பாக்கம் ஏரியாக இருந்தாலும், ஒட்டியம்பாக்கம் ஏரியாக இருந்தாலும், அனைத்து ஏரிகளும் நிரம்பிய நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 40 ஏரிகளில் உள்ள உபரி நீர் அந்தப் பகுதிகளில் சூழ்ந்து இருக்கிறது. ஆகையால் இன்னும் 20 மணி நேரத்தில் அனைத்து மழைநீரும் வடிந்து சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணைமேயர் மகேஷ்குமார், மாமான்ற உறுப்பினர்கள் மற்றும் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *