செய்திகள்

சி.ஏ.ஏ.வை அமல்படுத்த மாட்டேன் எனக்கூற மாநிலங்களுக்கு உரிமையில்லை: அமித்ஷா திட்டவட்டம்

புதுடெல்லி , மார்ச் 14–

சி.ஏ.ஏ.வை திரும்பப் பெறும் என பேச்சுக்கே இடமில்லை, இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக்கூற மாநிலங்களுக்கு உரிமையில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:–

நம் தேசத்தில் இந்தியக் குடியுரிமையை உறுதி செய்வது இறையான்மை சார்ந்த உரிமை. அதில் எந்த சமரசமும் செய்யப்படாது. சிஏஏ–வை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம்.எதிர்க்கட்சியினர் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்கின்றனர். எதிர்க்கட்சியினர் வாக்குறுதிகளை மட்டுமே கொடுப்பார்கள், ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். ஆனால் பிரதமர் மோடி அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளுக்கு இதைவைத்து சமாதான அரசியல் செய்து வாக்கு வங்கியை நிறைக்க வேண்டும். சிஏஏ தேசத்துக்கான சட்டம். இச்சட்டம் அமலுக்கு வரும் என்று நான் சுமார் 41 முறையாவது கூறியிருப்பேன்.

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் சிஏஏ எதிர்ப்பு கருத்துகள், ஆட்சிக்கு வந்தால் சிஏஏவை திரும்பப் பெறுவோம் என்று கூறி வருகின்றனர். முதலில் இந்தியா கூட்டணிக்கு தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற முழு நம்பிக்கை இருக்கிறதா?. சிஏஏவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. அதனைத் திரும்பப் பெறுவது எளிதல்ல. நாங்கள் இது குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதன்மூலம் சிஏஏவை ரத்து செய்ய விரும்புவோர் ஆட்சிக்கே வர இயலாது.

இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்து நாங்கள் வாக்குவங்கி அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. எதிர்க்கட்சியினருக்கு வேறு வேலை ஏதும் இல்லை. அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. ஆனால் பிரதமர் மோடியின், பாஜகவின் வரலாறு வேறு. பாஜக சொல்வதும், பிரதமர் பேசுவதும் கல்வெட்டில் எழுதிய வார்த்தைகள் போன்றது. மோடியின் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். சிஏஏவையும் நாங்கள் தேர்தலை சந்திக்கும் முன் நிறைவேற்றியுள்ளோம். ராகுல் காந்தி, மம்தா, கெஜ்ரிவால் என எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்கள் பொய்யிலான அரசியல் செய்கிறார்கள்.சிஏஏ என்பது எந்தவொரு குடிமகனின் உரிமையையும் பறிக்காது; மாறாக இது குடியுரிமை வழங்க வழிசெய்கிறது. இந்த சட்டத்தைக் கண்டு சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம் என நானே பலமுறை கூறியிருக்கிறேன். கொரோனா பாதிப்புகளால் சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த அந்தந்த நாட்டு சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த சட்டம் சில நாட்களுக்கு முன்புதான் அமல்படுத்தப்பட்டது.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தங்கள் மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *