செய்திகள்

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் கையெழுத்திட வேண்டும்

அமைச்சர் பொன்முடி மீண்டும் வலியுறுத்தல்

சென்னை, அக். 25–

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மருது சகோதரர்கள் நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர்களை தமிழக அரசு மறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களை தி.மு.க. நினைவுகூற தவறியதாக, தமிழகத்தின் சுதந்திர போராட்ட வரலாறு அனைத்தும் தெரிந்தவர்போல, கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து கூறியிருக்கிறார். அதற்கான பதிலை, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேல் அக்கறை உள்ளவர் போல பேசுகிற தமிழக கவர்னர், ஊடகங்கள் வழியாக நான் அளிக்கும் பேட்டியை நிச்சயமாக கேட்பார் என்று கருதுகிறேன். ஆளுநருக்கு உண்மையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது அக்கறை இருக்குமானால் மதுரை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிமன்ற பேரவைக்குழு இரண்டும் சேர்ந்து, ஆட்சிக்குழுவின் மூலமாக 18.8.2023 அன்றும், ஆட்சிமன்ற பேரவைக்குழுவில் 20.9.2023 லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு ஒரு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது.

அது அந்த பல்கலைக்கழகத்தின் சட்ட விதியின்படி, ஆட்சிமன்ற பேரவைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும். ஆனால், அதற்கு வேந்தரின் கையெழுத்தும் தேவை என சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கரய்யா மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரர். கல்லூரி படிப்பையே இழந்து 9 ஆண்டுகள் சிறையில் வாடி இருக்கிறார். அதோடு இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து போராடியவர். அவருடைய வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டாவது கவர்னர், இதில் கையெழுத்திட வேண்டும்.

நீட் தேர்வால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என்பதில் மாணவ- – மாணவிகள் தெளிவுடன் உள்ளனர். விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர்களிடம் நான் பேசினேன். அவர்கள் எல்லோரும் எங்களுக்கு நீட் தேர்வே வேண்டாம் என்று குரல் எழுப்பி கையெழுத்திட்டனர்.

ஆன்லைன் மூலமாகவும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்தை போட்டு அனுப்பலாம். விளையாட்டுத்துறை அமைச்சரும் இதை அறிவித்துள்ளார். 50 லட்சம் கையெழுத்தையாவது வாங்கும் வகையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் அனைவரும் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீட் தேர்வால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதை உணர்ந்து அதற்கு மேலாக மாணவர்கள் கையெழுத்திடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *