செய்திகள்

கோவையில் பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகனப் பேரணி: மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு

கோவை, மார்ச்.19-

கோவையில் நடந்த பிரதமர் மோடி யின் பிரம்மாண்ட வாகன பேரணியில் மலர்கள் தூவி மக்கள் உற்சாக வரவேற்றனர்.

முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதா, மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பிரதமர் மோடி, தமிழகத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். 4-வது முறையாக பிரதமர் மோடி தமிழகத்துக்கு நேற்று வந்தார். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பின்னர் பிரதமர் மோடி, சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5.30 மணிக்கு கோவை வந்தார்.

அங்கு அவரை மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் கோவை சாய்பாபா காலனிக்கு பிரதமர் மோடி வந்தார்.

பிரதமரின் வருகையையொட்டி பாரதீய ஜனதா சார்பில் ஆங்காங்கே பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. வழி நெடுகிலும் திரண்டு நின்ற பொதுமக்களை பார்த்து புன்னகை யுடன் கையசைத்தபடி சாய்பாபா காலனிக்கு பிரதமர் மோடி வந்தார்.

மாலை 6.10 மணிக்கு சாய்பாபா காலனியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த திறந்த காரில் பிரதமர் மோடி ஏறினார். அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோரும் அந்த வாகனத்தில் ஏறினர்.

2.5 கி.மீ. தொலைவு பேரணி

இதையடுத்து பிரதமரின் பிரமாண்ட வாகன பேரணி, அங்கிருந்து ஆர்.எஸ்.புரம் நோக்கி புறப்பட்டது. சாய்பாபா காலனி போலீஸ் நிலையம், வடகோவை மேம்பாலம், சென்டிரல் தியேட்டர், சிந்தாமணி ரவுண்டானா, காமராஜபுரம் சிக்னல் வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகத்தை வந்து சேர்ந்தது. இந்த பிரம்மாண்ட பேரணி சுமார் 2.5 கி.மீ. தொலைவு வரை நடைபெற்றது.

பிரதமர் சென்ற வழியெங்கிலும், சாலைகளில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்றனர். அவர்கள் மலர்களை தூவி பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர். தொடங்கிய இடத்திலிருந்து முடியும் இடம் வரை வழிநெடுகிலும் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் 3 டன்களுக்கு மேல் பூக்களை காரின்மீது வீசி பிரதமரை வரவேற்றனர்.

பல இடங்களில் மோடி… மோடி… என்று பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பினர். பலர் உயர்ந்த கட்டிங்களில் நின்றவாறும் பிரதமரை பார்த்தனர். அவர்கள் அனைவரையும் பார்த்து பிரதமர் மோடி, தனது கைகளை அசைத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி, 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பாரத மாதா உருவப்படத்துக்கு மலர்களை தூவி வணங்கிய அவர், பின்னர் குண்டு வெடிப்பில் பலியானோரின் உருவப்படங்களுக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.

பிரம்மாண்ட வாகன பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி, நேற்று இரவு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 9.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *