செய்திகள்

காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,500 காவலர்கள்

சென்னை, ஜன. 16–

சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நாளை காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 15,500 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல் உதவி மையங்கள்

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும், அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

கண்காணிப்பு உயர் கோபுரங்கள்

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு வான்தந்தி கருவி, மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, வாட்சப் குழு அமைக்கப்பட்டும், பைனாகுலர் மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும், வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

கடலில் குளிக்கத்தடை

காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 3 All Terrain Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவர். சென்னை பெருநகர காவல் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் 85 காவல் ஆளிநர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

குழந்தைகளுக்கு அடையாள அட்டை

கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களை நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். ஆகவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.

மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிப்படும். மேலும், அதிக திறன் கொண்ட டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *